முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மத்திய துணை கண்காணிப்பு குழுவினரிடம் அணைக்கு மின்சார இணைப்பு வழங்க தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.


முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மத்திய துணை கண்காணிப்பு குழுவினரிடம் அணைக்கு மின்சார இணைப்பு வழங்க தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, உச்சநீதிமன்றம் நியமித்த மூன்று உறுப்பினர்கள் கொண்ட மத்திய கண்காணிப்புக்குழுவுக்கு உதவியாக துணைக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் வி.ராஜேஷ், தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு வைகை பாசன பிரிவு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், பெரியாறு அணை சிறப்பு பிரிவு உதவி கோட்ட பொறியாளர் சாம் இர்வின், கேரள அரசின் பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் கிரிஜாபாய், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர். 
கடந்த ஆக.12 இல் அணையின் நீர்மட்டம் 133.75 அடியாக இருந்தபோது இக்குழுவினர் அணையை ஆய்வு செய்தனர். 
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், மாதாந்திர பராமரிப்பு பணிகள் பற்றி ஆய்வு செய்ய அக்குழுவினர் அணைக்கு வந்திருந்தனர்.
முன்னதாக குழுவின் தலைவர் ராஜேஷ் மற்றும் தமிழக அதிகாரிகள் தேக்கடி படகு துறையிலிருந்து தமிழக பொதுப்பணித் துறை படகிலும், கேரள அரசு பிரதிநிதிகள் கேரள வனத்துறை படகிலும் அணைக்குச் சென்றனர். 
குழுவினர் முல்லைப் பெரியாறு பிரதான அணை, பேபி அணை, கேலரிப்பகுதி மற்றும் மழையின் அளவு, அணைக்கு நீர்வரத்து, நீர் வெளியேற்றம், தண்ணீர் கசிவு குறித்தும், 13 மதகுகளில் 2, 4, 6, 8 ஆகிய ஷட்டர்களை இயக்கியும் ஆய்வு செய்தனர். 
பின்னர் பிற்பகல் 3 மணிக்கு குமுளி 1 ஆம் மைல் பகுதியில் உள்ள துணைக்குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, முல்லைப்பெரியாறு அணையின் ஆய்வு நிலவரத்தை தலைமை கண்காணிப்பு குழுவுக்கு அனுப்பவும், வல்லக்கடவு கல் பாலத்தை சீராக்க பெரியார் புலிகள் காப்பகம் நடவடிக்கை எடுக்க 
மத்திய தலைமைக்குழு சார்பில் கடிதம் எழுதியதாகவும் தெரிவிக்கப்பட்டது. அணைக்கு மின் இணைப்பு வழங்கவும் அதற்கு வன பகுதியில் மரங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தரப்பு பிரதிநிதி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வலியுறுத்தினார். அதே சமயம், அணையின் பாதுகாப்பு தொடர்பாக அடிக்கடி ஆய்வுப் பணிகள், கலந்தாலோசனைகள் நடைபெற வேண்டும் என்று கேரள தரப்பு பிரதிநிதிகள் தரப்பில் வலியுறுத்திக் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com