ஈடுசெய்யக்கூடியதா புதுகை விவசாயிகளின் வாழ்வாதாரம்?

வடகிழக்குப் பருவமழையின் முதல் புயல் எனக் கருதப்படும் கஜா புயல், கடந்த நவ. 16ஆம் தேதி அதிகாலை வேதாரண்யம் பகுதியில் கரையைக் கடந்தது.
புயலால் உருக்குலைந்த தென்னந்தோப்பு.
புயலால் உருக்குலைந்த தென்னந்தோப்பு.


வடகிழக்குப் பருவமழையின் முதல் புயல் எனக் கருதப்படும் கஜா புயல், கடந்த நவ. 16ஆம் தேதி அதிகாலை வேதாரண்யம் பகுதியில் கரையைக் கடந்தது.
கஜாவின் தாக்கம் எதிர்பாராத வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தை மிக அதிகமாகப் புரட்டிப் போட்டது. அந்த வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் ஏறத்தாழ பிற்பகல் வரை நீடித்த சூறைக்காற்று மாவட்டத்தின் பெரும்பகுதியைப் பதம் பார்த்துச் சென்றுவிட்டது. ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை வட்டங்களிலுள்ள பெரும்பான்மையான விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது. பிற பகுதிகளிலும் பாதிப்பு கடுமையாகவே இருந்தது.
மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருடன் களப்பணிக்காக அமைச்சர்களும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏறத்தாழ 12 நாள்கள் கடந்த பின்பும் மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு வழங்க முடியவில்லை. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 4,500 பணியாளர்கள் சீரமைப்புப் பணியில் உள்ளனர். 45,727 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
புதுக்கோட்டை நகரப் பகுதியில் ஏறத்தாழ 100 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இன்னமும் பல இடங்களில் பகல் நேர மின் விநியோகம் நிறுத்தியே வைக்கப்பட்டிருக்கிறது.
3 நாள்களில் முழுமையான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுவதும் பெரும் சவாலான பணியே! இச் சூழ்நிலையில் விவசாயமே பிரதான தொழிலான புதுகை மண்ணையும் மக்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 2.10 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 60,000 வீடுகள் கிராமப்புற குடிசைகளே.
5158 ஹெக்டேரில் தென்னையும், 2168 ஹெக்டேர் முந்திரியும், 1552 ஹெக்டேர் வாழையும், 1336 ஹெக்டேர் கரும்பும், 946 ஹெக்டேர் மக்காச்சோளமும், 810 ஹெக்டேர் நெல்லும் புயலால் அழிந்திருக்கின்றன. இந்தக் கணக்கெடுப்பை மேலாய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருவதால், இழப்பு மதிப்பு இன்னும் அதிகரிக்கலாம்.
வாழ்வாதாரம் என்பது வீழ்ந்துபோன பயிருக்கு அளிக்கப்படும் சொற்பத் தொகையால் ஈடு செய்யப்படக் கூடியதா என்பதே இப்போதுள்ள கேள்வியாக முன்நிற்கிறது.
எடுத்துக்காட்டாக, தென்னை ஒன்றுக்கு ரூ. 1,100 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் உடைந்து வீழ்ந்த அந்த மரத்தை அப்புறப்படுத்துவதற்குத் தான் போதுமானதாக இருக்கும் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.சி. சோமையா.
ஒரு தென்னை மரம் மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு குலை விடும் எனக் கணக்கிட்டாலும் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வருமானம் தரும்; ஒரு தென்னங்கன்று காய்க்கத் தயாராகும் என்றாலும் தென்னை விவசாயிக்கு ஒரு மரத்துக்கு குறைந்தது ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும் என்கிறார் சோமையா.
இதேபோலத் தான் முந்திரியும், வாழையும், மக்காச்சோளமும், தேக்கும், மரவள்ளியும், கரும்பும் எல்லாமும்! ஒரு விவசாயி, தனது மகனையோ மகளையோ தொழிற்கல்வியில் படிக்க வைத்திருந்தால் அடுத்தக் கல்வியாண்டில் அவர் செலுத்த வேண்டிய கட்டணம் வீழ்ந்துபோன அந்த மரங்களையும் பயிர்களையும் நம்பியே இருந்திருக்கும்.
அதேபோல வீடு கட்டுதல், திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகளுக்கு அடுத்த விளைச்சலை நம்பியே அந்த விவசாயி இருந்திருப்பார். புயலால் நேரிட்ட வீழ்ச்சி இவற்றையும் இன்னும் சில ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட செய்திருக்கும்.
எனவே புதுக்கோட்டை விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வழிகளை மத்திய, மாநில அரசுகள் தாராளமாக செய்ய வேண்டும் எனப் புதுகை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் நிவாரண நிதியுதவிகளை அதிகரித்து வழங்குவதுடன், விவசாய நிலப்பரப்பை மீண்டும் பசுமையாக்கச் செய்வதற்கு மரக்கன்றுகளை விலையில்லாமல் வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களின் கூலியை வங்கிக் கணக்கில் போட்டவுடன் அவர்கள் வாரிசுகளுக்காகப் பெற்ற கல்விக் கடன் தொகைக்கு எடுத்துக் கொள்வதாகக் குற்றம்சாட்டுகிறார் விவசாயிகள் சங்கத் தலைவர் சோமையா.
புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்றாட உணவுக்கே கொடையாளர்களின் வருகையை எதிர்பார்த்து நிற்கும் துயரம் தீர்க்க விவசாயக் கடன்களையும் கல்விக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள். இவையன்றி புதுக்கோட்டை மாவட்டத்தின் மறுநிர்மாணம் இன்னும் சில ஆண்டுகளானாலும் ஆச்சரியமில்லை.

மனஉறுதியை தருவது முக்கியம்
புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை விவசாயிகளுக்கு மன உறுதியைத் தர வேண்டியது மிக முக்கியமான அம்சம் என்கிறார் தொழிலதிபர் ஒருவர்.
தனக்கு மிகவும் நெருக்கமான பெரு விவசாயி (தென்னை) இந்தப் புயலுக்கு முன்பு கேரளத்துக்கு வழக்கமாக ஆர்டர் அனுப்பும் வியாபாரியிடம் ரூ. 3 கோடி முன்தொகை பெற்றிருந்தார்.
புயலால் தென்னை முழுவதும் அழிந்தது. முன்தொகையில் பெரும்பகுதி வீட்டின் திருமணச் செலவுகளில் தீர்ந்து போனது. செய்வதறியாது திகைத்த அவர் விஷம் குடித்து இறந்தே போனார். 
எனவே, இயற்கைப் பேரிடர் துயரம்தான், வருத்தம் தான், ஆனால் பாதிப்பால் வாழ்க்கையே போனதாகக் கருதக் கூடாது. இதை விவசாயிகளுக்கு மட்டுமல்ல பொதுமக்கள் அனைவருக்குமே உணர்த்த வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com