பராமரிப்பின்றி ஐந்திணை மரபணுப் பூங்கா!

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சுமார் ரூ.7.16 கோடியில் அமைக்கப்பட்ட ராமநாதபுரம் அருகே உள்ள ஐந்திணை மரபணு- பாலை பூங்கா பராமரிப்பின்றி உள்ளது.
ஐந்திணைப் பூங்காவின் முகப்புத் தோற்றம்.
ஐந்திணைப் பூங்காவின் முகப்புத் தோற்றம்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சுமார் ரூ.7.16 கோடியில் அமைக்கப்பட்ட ராமநாதபுரம் அருகே உள்ள ஐந்திணை மரபணு- பாலை பூங்கா பராமரிப்பின்றி உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக பாரம்பரியத்தை இளந்தலைமுறைக்கு விளக்கும் வகையில் ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி குறிஞ்சிப் பூங்கா சேலம் ஏற்காட்டிலும், முல்லைப் பூங்கா திண்டுக்கல் சிறுமலையிலும், நெய்தல் பூங்கா நாகப்பட்டினம் திருக்கடையூரிலும், மருதம் பூங்கா தஞ்சாவூரிலும், பாலைப் பூங்கா ராமநாதபுரம் மாவட்டம் அச்சரபிரம்பு பகுதியிலும் அமைக்கப்பட்டன.
குறிஞ்சி தொடங்கி மருதம் வரையிலான பூங்காக்கள் 2012 ஆம் ஆண்டே திறக்கப்பட்ட நிலையில், அச்சபிரம்பில் உள்ள பாலைப் பூங்கா மட்டும் கடந்த 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, அடுத்த ஆண்டே அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.
ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் சாலையில் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் திருப்புல்லாணிக்கு முன்பாக அச்சப்பிரம்பு பகுதியில் இடதுபுறம் சுமார் 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அதில் 10 ஏக்கரில் இப்பூங்கா அமைந்துள்ளது. பூங்காவில் காட்டு ரோஜா உள்ளிட்ட அரிய மலர்கள், கூந்தல் பனை உள்ளிட்ட தமிழக பாரம்பரிய மரங்கள், கற்றாழை உள்ளிட்ட வறட்சிப் பகுதி தாவரங்கள், பாலை நிலத்தை நினைவூட்டும் மணல் மேடுகள், ஓலையால் ஆன குடில்கள், குகை கட்டடம், யானை போன்ற விலங்கின சிலைகள், சிறுவர்கள் விளையாடும் பகுதி ஆகியவை அமைக்கப்பட்டன.
இப்பூங்காவைப் பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.15, சிறுவர்களுக்கு ரூ.10, அரசுப் பள்ளி மாணவர் எனில் ரூ.2 எனவும், தொலைக்காட்சி நாடகம், திரைப்படங்களின் படப்பிடிப்புக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. வாகனம் நிறுத்த, பேருந்துகளுக்கு ரூ.100, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.15, கேமராவுக்கு ரூ.25, விடியோ கேமராவுக்கு ரூ.50 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பூங்காவைப் பார்க்க விடுமுறை நாள்களில் 1500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சராசரியாக பூங்கா மூலம் மாதத்துக்கு ரூ.1.50 லட்சம் வருவாய் கிடைக்கிறது. ஆனால், பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இப்பூங்கா முன்புறம் பதிக்கப்பட்டுள்ள தரை ஓடுகள் அனைத்தும் பெயர்ந்து காணப்படுகின்றன. நுழைவு வாயில் அருகே உள்ள யானை சிலை, பாதையோர மின் அலங்கார விளக்குகள் சேதமடைந்துள்ளன. மணல் மேடுகள் புதர் மேடுகளாகிவிட்டன. பூங்காவைச் சுற்றிப் பார்க்க வருவோருக்கான தகவல் மையம் மற்றும் உணவகம் செயல்பட வில்லை. சிறிய மழை பெய்தால் கூட சிறுவர் விளையாட்டு பகுதியின் அருகே நடைபாதை உள்ளிட்ட அனைத்திலும் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மேலும் குடிநீர், கழிப்பறை வசதிகள் சரியாக இல்லை. மொத்தத்தில் இப்பூங்கா புதர்மண்டி, பொலிவிழந்து நிஜ பாலைவனத்தை நினைவூட்டுகிறது.
இப்பூங்கா அமைக்கப்பட்டு இரண்டே ஆண்டுகளில் அழியும் நிலைக்குச் செல்வது சரியல்ல என்றும், சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பூங்காவை புதுப்பிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணியாளருமில்லை.. அதிகாரியுமில்லை..!
பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மரபணு ஐந்திணைப் பூங்காவுக்கு என தனி அதிகாரி நியமிக்கப்படவில்லை. உதவித் தோட்டக்கலைத் துறை அதிகாரி மற்றும் பூங்காவை கண்காணிக்க ஆர்.எஸ்.மங்கலம் தோட்டக்கலைத்துறை அலுவலரும் பொறுப்பு எனும் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பூங்காவை தினமும் பராமரிக்க தலா ரூ.300 ஊதியத்தில் 6 பெண் ஊழியர்கள் உள்ளனர். மேலும் 4 ஆண் பணியாளர்கள், பார்வையாளரிடம் கட்டணம் வசூலிப்பது, மின்விளக்குகளை சீரமைப்பது, செடிகளைப் பராமரிப்பது ஆகிய பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
பூங்கா கண்காணிப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர் எம்.முத்துராஜிடம் இதுபற்றி கேட்ட போது அவர் கூறியதாவது: பூங்காவில் உள்ள நடைபாதை தரை ஓடுகளை புதுப்பிக்கவும், கூரைகளைச் சீரைமைக்கவும் ரூ. 42 லட்சம் நிதி, அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பூங்கா சீரமைக்கப்படவுள்ளது என்றார்.

பூங்காவில் பெயர்ந்து காணப்படும் நடைபாதை தரை ஓடுகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com