நிலத்தடி நீர் விவகாரம்: தமிழக அரசின் அரசாணை சரியானது

நிலத்தடி நீரை எடுப்பது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலத்தடி நீரை எடுப்பது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலத்தடி நீரை எடுப்பதற்கு தனியார் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள் அரசின் தடையில்லா சான்றை கட்டாயமாகப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து  தமிழக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி 75 தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்நிறுவனங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், தமிழக அரசு மத்திய நிலத்தடி நீர் ஆணையம் பிறப்பித்த விதிகளுக்கு முரணாக இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையைப் பிறப்பிக்க தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
அரசுத் தரப்பு பதில் மனு: இது தொடர்பாக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இயற்கை வளமான நிலத்தடி நீரைப் பாதுகாக்க தமிழக அரசுக்கு தார்மீக உரிமை உள்ளது. வணிக ரீதியாக நிலத்தடி நீரை சட்ட விரோதமாக உறிஞ்சும் தனியார் நிறுவனங்களை தடை செய்யவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிலத்தடி நீர் நாட்டின் சொத்து-நீதிபதி: இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ""நிலத்தடி நீர் என்பது நாட்டின் சொத்து. நீர் இல்லாமல் உலகில் எந்த உயிரினமும் வாழ முடியாது. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது. தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
இந்தியா முதலிடம்:    ஆனால், சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி ரசாயன மாற்றம் செய்து வணிக ரீதியில் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாக வணிக நோக்கத்துக்காக அதிகளவில் நிலத்தடி நீர் திருடப்படும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. குடிநீர் தேவையில் 80 சதவீதம் நிலத்தடி நீரைச் சார்ந்துள்ள போதிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 77 சதவீதம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விட்டதாகவும், வரும் 2020-ஆம் ஆண்டில் சென்னை, தில்லி உள்ளிட்ட 21 நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அரசுக்கு கடமை உள்ளது: எதிர்கால சந்ததியின் தேவைக்காக நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை சரியானது; அந்த அரசாணையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. 
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மனுதாரர்களுக்கு நிலத்தடி நீருக்குச் சொந்தம் கொண்டாடும் உரிமை கிடையாது. நிலத்தில் இருந்து உறிஞ்சப்படும் நிலத்தடி நீரின் அளவை அளக்க ப்ளோ-மீட்டர் கருவியைப் பொருத்தாத நிறுவனங்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்கக்கூடாது. வணிக நோக்கத்துக்காக நாட்டின் சொத்தான நிலத்தடி நீரை சட்ட விரோதமாகத் திருடுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 379-ஆவது பிரிவின் கீழ் திருட்டு வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
கண்காணிப்புக் குழுக்கள்: அரசாணைப்படி ப்ளோ-மீட்டர் பொருத்திய பிறகு அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி தண்ணீர் உறிஞ்சப்படுகிறதா என்பதை கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com