மானிய டீசலை உயர்த்தி வழங்கக் கோரி மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்

அனைத்து வகை விசைப்படகுகளுக்கும் மானிய டீசல் வழங்க வேண்டும், மானிய டீசலை  உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட
மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதன்கிழமை காரைக்கால் துறைமுகத்தில்... 
மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதன்கிழமை காரைக்கால் துறைமுகத்தில்... 

அனைத்து வகை விசைப்படகுகளுக்கும் மானிய டீசல் வழங்க வேண்டும், மானிய டீசலை  உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் புதன்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால், மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகையில்...:   நாகை கடலோர மாவட்டங்களில் உள்ள  64 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், பயன்பாட்டில் உள்ள அனைத்து வகை விசைப்படகுகளுக்கும் மானிய டீசல் வழங்க வேண்டும். பெரிய விசைப்படகு ஒன்றுக்கு 3,000 லிட்டரும், சிறிய வகை படகு ஒன்றுக்கு 420 லிட்டரும் மானிய டீசல் வழங்க வேண்டும். மீன்பிடி தொழில் செய்பவர்களுக்கு வரி விதிப்பில்லாமல் டீசல் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலோர மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  நடைமுறைப்படுத்தக் கூடாது. இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு,  விடுவிக்கப்படாமல் உள்ள விசைப்படகு ஒன்றுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நாகை துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
காரைக்காலில்...: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமத்தினரும் ஈடுபட்டனர். மாவட்டத்தில் ஏறக்குறைய 300 விசைப்படகுகள் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மீனவ கிராமங்களில் இருந்து சுமார் 600 ஃபைபர் மோட்டார் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
பெரிய படகுகள் அனைத்தும் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொலைதூரத்துக்கு மோட்டார் ஃபைபர் படகுகள் பல அரசலாற்றங்கரையிலும், அந்தந்த மீனவ கிராமத்திலிருந்து புறப்படும் ஃபைபர் படகுகள் கிராமத்தின் கடலோரப் பகுதியிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ராமேசுவரம்:   இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும், சேதமடைந்துள்ள விசைப்படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வந்துள்ள மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், மானிய டீசலை உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய  5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் இப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட அளவில்  25 ஆயிரம் மீனவர்கள் மற்றும் சார்பு-தொழிலாளர்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட துறைமுகங்களில் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட அனைத்து துறைமுகங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com