ஆட்சியைக் கவிழ்த்து முதல்வராக வேண்டும் என்று எந்த காலத்திலும் நினைத்தது இல்லை: ஓபிஎஸ்  

ஆட்சியைக் கவிழ்த்து முதல்வராக வேண்டும் என்று எந்த காலத்திலும் நினைத்தது இல்லை என்று தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் விளக்கமளித்துள்ளார். 
ஆட்சியைக் கவிழ்த்து முதல்வராக வேண்டும் என்று எந்த காலத்திலும் நினைத்தது இல்லை: ஓபிஎஸ்  

சென்னை: ஆட்சியைக் கவிழ்த்து முதல்வராக வேண்டும் என்று எந்த காலத்திலும் நினைத்தது இல்லை என்று தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் விளக்கமளித்துள்ளார். 

அமமுக தலைவர் டிடிவி தினகரன் சென்னை அடையாறு பகுதியில் உள்ள தனது வீட்டில் வெள்ளியன்று காலை  செய்தியாளர்களை சந்தித்தார் . 

அப்போது கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் ஓ. பன்னீர்செல்வத்துடன் நான் சந்தித்துப் பேசியது உண்மைதான். அப்போது என்னிடம் பன்னீர்செல்வம், பழனிசாமியுடன் இணைந்தது தவறு என்றும், தான் தவறு செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். பழனிசாமியை அகற்ற தயாராக இருக்கிறேன் என்றும் அவர் கூறினார். நான் எந்த முடிவாக இருந்தாலும் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு செய்வேன் என்று கூறிவிட்டேன் என்று தெரிவித்தார். 

மேலும் மறுபடியும் கடந்த செப்டம்பர் மாதம் என்னை சந்திக்க நேரம் ஓபிஎஸ் கேட்டதால் தான் இதனை வெளி உலகத்துக்குக் கொண்டு வந்தேன். ஒரு பக்கம் எனக்கு தூது விடுத்துவிட்டு மறுபக்கம் என்னை தூற்றுகிறார்.  அவ்வளவு ஏன், ஓபிஎஸ் சகோதரர் வீட்டிற்கே வந்து என்னை சந்தித்தார். எங்கள் குடும்பத்தை வேண்டாம் என்று கூறிக் கொண்டே எனக்குத் தூது விடுவதால் தான் தற்போது வெளிஉலகத்துக்கு தெரிவித்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்தேன் என்று கூறினார். 

அத்துடன் இபிஎஸ், ஓபிஎஸ்-சுடன் நாங்கள் இணைவது தற்கொலைக்குச் சமம். அவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே இல்லை. வேண்டும் என்றால் எங்களுடன் அவர்கள் இணைந்து கொள்ளலாம் என்று தினகரன் கூறினார்.         

இந்நிலையில் ஆட்சியைக் கவிழ்த்து முதல்வராக வேண்டும் என்று எந்த காலத்திலும் நினைத்தது இல்லை என்று தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் விளக்கமளித்துள்ளார். 

தினகரனின் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க அடையாறு க்ரீன்வேஸ் சாலையில்  அமைந்துள்ள தனது வீட்டில் வெள்ளியன்று மாலை செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பல கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

உங்களனைவரையும் நெடுநாட்கள் கழித்து சந்தித்ததில் மகிழ்ச்சி. நேற்றில் இருந்து தினகரன் ஒரு புதிய பிரச்னையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். அவரது ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன்  மூலமாக அவர் இதனைச் செய்து கொண்டிருக்கிறார். 

நேற்று திருப்பரங்குன்றத்தில் நடந்த கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் எங்களுக்குக் கிடைத்த  அமோக வரவேற்பைக் கண்டு தினகரன் குழப்பம் அடைந்து விட்டார். அதன் காரணமாக எங்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று செயல்படுகிறார். 

நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். கட்சிக்கு விசுவாசம் உள்ளவன். நான் முதல் அமைச்சராக இருந்த போது எனக்கு கிடைத்த வரவேற்பையும், மக்கள் ஆதரவையும் கண்டு அவர் மிகுந்த எரிச்சல் அடைந்து விட்டார். அதனால்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார். பொய் சொல்லி அரசியல் செய்யும் ஒரு தரக்குறைவான அரசியலை தினகரன் செய்து வருகிறார்.       

எனக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் இடையே பிளவை உண்டாக்க வேண்டும் என்று கருதி அவர் செயல்படுகிறார். அவர் கூறியபடியே நான் அவரை சந்தித்தது உண்மைதான். ஆனால் உண்மையான காரணம் என்பது வேறு. அவர்கள் தரப்பில்தான் தொடர்ந்து சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அப்போது முதல்வர் பழனிசாமிக்கும் ஆட்சிக்கும் கட்சிக்கும் சிக்கல் உண்டாக்கும் வகையில் தினகரன் செயல்பட்டு வந்ததார். அதை சரி செய்யலாம். அவர் தனது செயல்களுக்கு வருந்துவார், திருத்துவார் என்று எண்ணித்தான் சந்திக்கச் சென்றேன்.  ஆனால் அவர் தொடர்ந்து தான் முதல்வராக வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசிக் கொண்டிருந்தார். எனவே நான் வெளியேறி விட்டேன்.  

ஆனால் அவரைச் சந்தித்த 12.07.2017-க்கு பின்னர் 23.09.2017 அன்றுதான் கட்சியில் அணிகள் இணைந்தன.  அதேசமயம் இன்று காலை அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பர் என்னைச் சந்தித்தார். தனது செயலுக்கு மன்னிப்புக் கோரினார். சின்னத்தனமான அரசியலில் தினகரன் ஈடுபட்டு வருகிறார்.   

நான் ஆட்சியில் துணை முதல்வராக இருக்கிறேன். நான் எப்படி அவர் கூறுவது  போன்று செயல்பட முடியும்? தினகரனோடு இனி ஓட்டும் இல்லை; உறவும் இல்லை. நான் மூன்று முறை முதல்வராக இருந்திருக்கிறேன். அந்த திருப்தியே எனக்குப் போதும்.  கட்சியை வலுப்படுத்துவது மட்டுமே எப்போதும் எனது நோக்கம் .   

கட்சிக்கு நான் ராஜ விசுவாசமாக இருந்திருக்கிறேன் தினகரனுக்கு முன்னரே எனக்கு ஜெயலலிதாவோடு அறிமுகம் இருந்தது. 1998-ஆண்டு நெல்லை அதிமுக மாநாட்டிற்கு அப்போதைய மாவட்டச் செயலாளரோடு சேர்ந்து நிதியளித்துள்ளேன். 

ஜெயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த பொழுது எங்கே சென்றார் தினகரன்? அவரிடம் என்ன ரகசியம் இருந்தாலும் வெளியிடட்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com