தமிழக ஆளுநரை  பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் நக்கீரன் கோபால் விடுதலை  

தமிழக ஆளுநரை  பணி செய்ய விடாமல் தடுத்தார் என்று செவ்வாய் காலை கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை விடுவித்து சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தமிழக ஆளுநரை  பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் நக்கீரன் கோபால் விடுதலை  

சென்னை: தமிழக ஆளுநரை  பணி செய்ய விடாமல் தடுத்தார் என்று செவ்வாய் காலை கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை விடுவித்து சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மாணவிகளை தவறான வழியில் நடக்க வற்புறுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி, தனக்கு ஆளுநரைத் தெரியும் என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதுதொடர்பாக பத்திரிக்கை ஆசிரியரான நக்கீரன் கோபால், ஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்டார். 

இதைத்தொடர்ந்து நக்கீரன் கோபாலை, தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையத்தில் செவ்வாயன்று கைது செய்தனர். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை போலீஸ் கைது செய்தது. மேலும் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124இன் கீழ் ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவரை சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் பலத்த பாதுகாப்புடன் நக்கீரன் கோபால், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் நக்கீரன் கோபாலை, சென்னை எழும்பூர் 13ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். 

அப்போது விசாரணையில் அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் கூறியதாக நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர் பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நக்கீரன் கோபாலை இந்திய தண்டனைச் சட்டம் 124இன் கீழ் கைது செய்திருப்பது செல்லாது.  இந்த சட்டப் பிரிவில் ஆளுநரை பணி செய்ய  விடாமல் தடுத்ததாக கூறப்படுவதற்கு முகாந்திரம் இல்லை. அதேபோல் ஆளுநர் தன்னுடைய புகாரில், கோபால் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரவில்லை.  இத்தகைய வழக்குகளில் கைது செய்வது என்பது  தவறான முன்னுதாரணம் ஆகி விடும். இந்த வழக்கிற்கும் குறிப்பிட்ட சட்டப் பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை. எனவே கோபாலை நீதிமன்ற காவலின் கீழ் சிறைக்கு அனுப்புமாறு உத்தரவிட முடியாது.   

இவ்வாறு தெரிவித்த நீதிபதி கோபிநாத் நக்கீரன் கோபாலை விடுதலை செய்து உத்தரவிட்டார். 

விடுதலைக்குப் பின்னர் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நக்கீரன் கோபால் தனது விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com