கனமழை: துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு

கனமழை எச்சரிக்கையை அடுத்து, கடலோர மாவட்டங்களில் உள்ள துறைமுகங்களில் செவ்வாய்க்கிழமை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.


கனமழை எச்சரிக்கையை அடுத்து, கடலோர மாவட்டங்களில் உள்ள துறைமுகங்களில் செவ்வாய்க்கிழமை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
வானிலை மைய அறிக்கை: வங்கக் கடலில் ஒடிஸா மாநிலம், கோபல்பூர் பகுதிக்கு 560 கி.மீ. தொலைவிலும், கலிங்கப்பட்டினத்துக்கு 510 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மேற்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இதுமேலும் வலுப்பெற்று புயலாக மாறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
கடலூரில்...
கடலூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் துறைமுகத்தில் திங்கள்கிழமை முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மே.மாத்தூரில் 70 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: பெலாந்துறை 46.2, கீழச்செருவாய் 44, ஸ்ரீமுஷ்ணம் 42.4, குப்பநத்தம் 38, விருத்தாசலம் 37, வேப்பூர் 26, காட்டுமயிலூர், சேத்தியாத்தோப்பு தலா 24, கடலூர், வானமாதேவி தலா 23, பண்ருட்டி 19, புவனகிரி 9, லால்பேட்டை 6.5, லக்கூர் 5, காட்டுமன்னார்கோவில், கொத்தவாச்சேரி தலா 4, அண்ணாமலை நகர், தொழுதூர் தலா 3, சிதம்பரம் 2.
பாம்பனில்...
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, பாம்பன் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்கிழமை ஏற்றப்பட்டது. இதனால் ராமேசுவரம் சுற்று வட்டாரப்பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை.
நாகையில்...
வானிலை ஆராய்ச்சி மைய அறிவுறுத்தலின்படி, நாகை துறைமுகத்தில் தூர புயல் எச்சரிக்கை கொடியான 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் ஏற்றப்பட்டது என நாகை துறைமுக அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காரைக்காலில்...
இதேபோல், காரைக்கால் மார்க் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com