நவீன அறுவைச் சிகிச்சையில் சிறுமியின் முக கட்டி அகற்றம்: அரசு ஸ்டான்லி மருத்துவர்கள் சாதனை

ரத்தநாள குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட ஒடிஸா மாநிலச் சிறுமியின் முகத்தில் உருவான கட்டியை நவீன அறுவை
சிறுமி தசபந்தி, பெற்றோருடன் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம், ரத்தநாளத் துறைத் தலைவர் டாக்டர் இளஞ்சேரலாதன் 
சிறுமி தசபந்தி, பெற்றோருடன் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம், ரத்தநாளத் துறைத் தலைவர் டாக்டர் இளஞ்சேரலாதன் 


ரத்தநாள குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட ஒடிஸா மாநிலச் சிறுமியின் முகத்தில் உருவான கட்டியை நவீன அறுவை சிகிச்சை மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
ஒடிஸா மாநிலம், பத்மபூரைச் சேர்ந்தவர் நாராயணா, தேநீர் கடை ஊழியர். மகள் தசபந்தி (15), பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவி. தசபந்திக்கு ரத்தநாள குறைபாடு நோய் காரணமாக மூக்கு அருகிலும், மேல்தாடையில் உதட்டுக்கு கீழேயும் கட்டி உருவாகியது. 
இதனால் பார்ப்பதற்கு மிக கோரமாகவும், ரத்தக் கசிவாலும் தசபந்தி நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்தார்.
ஒடிஸா மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றும் அக்கட்டியை நீக்க முடியவில்லை. இதையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒன்றரை மாதத்துக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவைச் சிகிச்சை மூலம் தசபந்தி முகத்தில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பொன்னம்பலம் நமச்சிவாயம் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
தசபந்தியை பரிசோதித்தபோது, அவருக்கு பிறவியிலேயே ரத்த நாளங்கள் சரியாகப் பிரிந்து செல்லாமல் ஒரே இடத்தில் குவிந்து கட்டியாக மாறியிருப்பது தெரியவந்தது. 
இதில், மூளை, கண்களுக்குச் செல்லும் ரத்த நாளங்களும் அடங்கி இருந்ததால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்வது மிகவும் சவாலாக இருந்தது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு தசபந்தியின் முகத்தில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டது.
கட்டி அகற்றம்: ரத்தநாள அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் இளஞ்சேரலாதன், மருத்துவர்கள் பெரியகருப்பன், சண்முக வேலாயுதம், தீபன்குமார், சித்ராதேவி, உறைவிட மருத்துவ அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். நவீன ரத்தநாள சிகிச்சை மூலம் ரத்தத்தை உறைய வைக்கும் வேதிப் பொருள்கள், கட்டி இருந்த பகுதிக்குள் முதலில் செலுத்தப்பட்டன. 
இதைத் தொடர்ந்து, அறுவைச் சிகிச்சை மூலம் அந்தக் கட்டி அகற்றப்பட்டது.
இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும்போது சிறிது தவறு ஏற்பட்டாலும் நோயாளி உயிரிழக்கும் வாய்ப்பு உண்டு. இது போன்ற அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள சுமார் ரூ. 8 லட்சம் வரை செலவாகும். இன்னும் ஒரிரு நாளில் தசபந்தி வீடு திரும்புவார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com