வேதாரண்யத்தில் கேள்விக்குறியாகும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்!: 2015-இல் தொடங்கப்பட்டு ஒருவர் கூட படிக்கவில்லை

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 2015 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஒருவர் கூட படிக்காத அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் நோக்கம் கேள்விக்குறியாகி வருவது,
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்காக கட்டப்பட்ட புதிய கட்டடம்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்காக கட்டப்பட்ட புதிய கட்டடம்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 2015 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஒருவர் கூட படிக்காத அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் நோக்கம் கேள்விக்குறியாகி வருவது, சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயிற்சி நிறுவனத்துக்காக ரூ. 2.45 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடம் பயன்பாடின்றி போகுமோ? என்ற நிலையும் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுக்காக இடைநிலை ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தோடு 2015- ஆம் ஆண்டு அப்போதைய மாநில அரசு புதிய திட்டத்தை உருவாக்கியது. 
ஒன்றிய நிலையில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை தொடங்கி நடத்தவும், முதல்கட்டமாக மாநிலத்தில் 7 இடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில், வேதாரண்யத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தற்காலிகமாக அங்குள்ள எஸ்.கே. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது. 
அத்துடன், இப்பயிற்சி நிறுவனத்துக்கு முதல்வர், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 15 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டதோடு, மாணவர் சேர்க்கையை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. 
இரண்டாண்டுகள் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கான இந்த நிறுவனத்தில் ஆண்டுதோறும் 50 மாணவர்களை சேர்த்து பயிற்சி அளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஒருவர் கூட சேரவில்லை... பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியை கல்வித் தகுதியாகக் கொண்டுள்ள இந்த ஆசிரியர் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க அரசு முன்வந்தபோதிலும், இங்கு சேர்ந்து படிக்க மாணவர்கள் முன்வராத நிலையே உள்ளது. இதனால், இதன் செயல்பாடு பெயரளவில் மட்டுமே உள்ளது.
இதனிடையே, இந்நிறுவனத்தில் சேர முன்வந்த 6 பேர், வெளி மாவட்டங்களில் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு மாறுதல் பெற்று சென்றுவிட்ட நிலையில், தற்போது ஒருவர் கூட இங்கு படிக்கவில்லை என்ற நிலை தொடர்கிறது.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்: வேதாரண்யம் - நாகை சாலையில் செயல்பட்டு வந்த மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அரசின் கொள்கை முடிவால் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டது. 
இந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தால் வேதாரண்யம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உருவாகவும், அதன் வாயிலாக அரசுப் பள்ளிகள் தவிர 64 -க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் உருவாகவும் காரணமாக அமைந்தன. இதனால், மூடப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வந்தது.
புற்றீசலாய் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்: இதனிடையே, மாநில அரசின் கல்விக் கொள்கையின்படி, தமிழகத்தில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல்போல் அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டன. 
குறிப்பாக, வேதாரண்யம் பகுதியில் மூன்று தனியார் கல்வியியல் கல்லூரிகளும், நான்கு இடங்களில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கான தனியார் நிறுவனங்களும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதனால், மற்ற இடங்களை ஒப்பிடும்போது இந்த பகுதியில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதற்கிடையில், ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு முறை கொண்டுவரப்பட்டப் பிறகு, இப்பகுதியில் ஆசிரியர் பயிற்சி பெற்ற அனைவருக்கும் பணி வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகிவிட்டது. இதனால், தனியார் நிறுவனங்களே மாணவர்கள் சேர்க்கை கிடைக்காமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. 
இந்த நிலையில், 35 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்ற கதையாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இந்த புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு, ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்ட பகுதியில் ரூ. 2 கோடியே 45 லட்சம் மதிப்பில் நிரந்தரக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இங்கு பயிற்சி பெறுவதற்குத்தான் மாணவர்கள் இல்லை. 
தனி மனிதனை நெறிப்படுத்தவும், சமூக வளர்ச்சியை அறிவுசார்ந்தவையாக மேம்படுத்தவும் முழுமையாக உதவுவது கல்வி மட்டுமே. இந்த கல்விக்காகவே மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து, ஆண்டுதோறும் பெருந்தொகையை செலவிடுகிறது.
எனவே, நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடந்த 2015 -ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு ரூ. 2.45 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடம் பயன்பாடின்றியே உள்ளதால், அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின்வலியுறுத்தலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com