சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: மறுசீராய்வு கோரி ஐயப்ப பக்தர்கள் பேரணி

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்த விவகாரத்தில் மறுசீராய்வு கோரி, தருமபுரியில் வெள்ளிக்கிழமை ஐயப்ப பக்தர்கள் பேரணியாக வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: மறுசீராய்வு கோரி ஐயப்ப பக்தர்கள் பேரணி

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்த விவகாரத்தில் மறுசீராய்வு கோரி, தருமபுரியில் வெள்ளிக்கிழமை ஐயப்ப பக்தர்கள் பேரணியாக வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 தமிழக ஐயப்ப பக்தர்கள் பேரவையின் தருமபுரி பிரிவு சார்பாக நடைபெற இந்தப் பேரணிக்கு, பேரவையின் நிறுவனத் தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். முன்னதாக, நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, தருமபுரி சாலை விநாயகர் கோயில் அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்டனர். இந்தப் பேரணி முக்கியச் சாலைகள் வழியாக வந்து, தருமபுரி தொலைத் தொடர்பு அலுவலகம் அருகே நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்த ஆர்ப்பாட்டத்தில், உலக இந்து மிஷன் தலைவர் வழக்குரைஞர் காவேரிவர்மன், குருசாமிகள், வேதகிரி, கைலாசம், முருகேசன், சுகுமார், மாதையன், சண்முகம் ஆகியோர் பேசினர்.
 இதில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக, கேரள மாநில அரசு மறு ஆய்வு மனு செய்ய வேண்டும். அனைத்து வயது பெண்களை பம்பை நதியில் நீராட அனுமதிக்கக் கூடாது. ஆகம விதிகளை மீறும் செயலில் ஈடுபடக் கூடாது. சபரிமலையில் தொன்றுதொட்டு வரும் வழக்கத்தை மாற்ற முயற்சிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 பெண்கள் விளக்கேந்தி ஊர்வலம்
 குடியாத்தம், அக். 12: குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 200-க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கேந்தி ஊர்வலம் சென்றனர்.
 ஊர்வல முடிவில் சபரிமலைக்குச் செல்ல மாட்டோம் என பெண்கள் உறுதியேற்றனர். கோயில் தலைவர் டி. தாமோதரம், செயலர் பி. மோகன், பொருளாளர், எம். செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 திருப்பத்தூரில்...
 திருப்பத்தூர், அக். 12: திருப்பத்தூரில் உள்ள ஐயப்ப பக்தர்கள் சார்பில் வாணியம்பாடி பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகிலிருந்து சார்-ஆட்சியர் அலுவலகம் வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
 ராணிப்பேட்டையில்...
 ராணிப்பேட்டை, அக். 12: சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி வாலாஜாபேட்டையில் இந்து முன்னணியினர் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினர்.
 வாலாஜாபேட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் இருந்து புறப்பட்ட இப்பேரணியில் இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் டி.வி. ராஜேஷ் , மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மோகன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணி வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
 நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
 நாமக்கல், அக்.12:சபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாமக்கல்லில் இந்து அமைப்புகள் சார்பில் வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆன்மிக இந்து சமயப் பேரவை மற்றும் இந்து உணர்வாளர்கள் அமைப்பு சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து உணர்வாளர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநித்ய சேவானந்தா என்ற சந்திரன் தலைமை வகித்தார். ஆன்மிக இந்து சமயப் பேரவை கெüரவத் தலைவர் சோழாஸ் ஏகாம்பரம், மணி, சின்னுசாமி, ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இதில் ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, கள்ள உறவு குறித்த வழக்கில் குடும்ப வாழ்க்கை முறையை சீரழிக்கும் விதமாக அளித்துள்ள தீர்ப்பு, ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கும் தீர்ப்பு ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கம் எழுப்பினர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com