சென்னைத் துறைமுகத்தில் 4 ஆண்டுகளாக நிற்கும் "எம்.வி. அக்பர்' கப்பல்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

அந்தமானுக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் 'எம்.வி. அக்பர்' பழுதடைந்த நிலையில் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னைத் துறைமுகத்தில் 4 ஆண்டுகளாக நிற்கும் "எம்.வி. அக்பர்' கப்பல்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

அந்தமானுக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் 'எம்.வி. அக்பர்' பழுதடைந்த நிலையில் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 அந்தமான்-நிகோபர் யூனியன் பிரதேசத்தில் பொதுமக்களும், வர்த்தகர்களும் பெரும்பாலும் நீர்வழிப் போக்குவரத்தையே நம்பி உள்ளனர். அந்தமான்-நிகோபரில் உள்ளவர்களில் பூர்வீகமாகக் கொண்ட பழங்குடியினரைத் தவிர லட்சக்கணக்கானோர் மேற்கு வங்கம், ஆந்திரம், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவார்கள்.
 இவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்லவும், சுற்றுலா பயணிகளுக்கு வசதியாகவும் எம்.வி. அக்பர் உள்பட 4 கப்பல்கள் அந்தமானில் இருந்து சென்னை, கொல்கத்தா,விசாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களுக்கு இயக்கப்பட்டன. இதில் எம்.வி.ஹர்சவர்த்தனாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வளிக்கப்பட்டது. இந்நிலையில் பழுதடைந்த எம்.வி. அக்பர் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 ஒப்புதல் அளிப்பதில் முரண்பாடு?: 1971-ம் ஆண்டு கட்டப்பட்ட எம்.வி. அக்பர் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல் சுமார் 50 ஆண்டுகள்வரை பயன்பாட்டில் வைத்திருக்க முடியும். எனவே இதற்கு 2021-ம் ஆண்டுதான் முறைப்படி ஓய்வளிக்க வேண்டும். இந்நிலையில் எம்.வி.அக்பர் கடந்த 2013-ம் ஆண்டு கொழும்புவில் உள்ள கப்பல் தளத்தில் பழுது பார்க்கப்பட்டது. ஆனால் முறையாகப் பழுது பார்க்கப்படாததால், அடுத்த சில நாள்களிலேயே இக்கப்பல் மீண்டும் பழுதடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பழுது பார்க்கப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு குறித்து உள்துறை விசாரணை செய்து வருவதாக தெரிகிறது.
 இதில் ஏற்பட்ட காலதாமதத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இக்கப்பல் இயல்பாகவே ஓய்வளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந்நிலையில் இக்கப்பலை மீண்டும் பழுது பார்ப்பதா அல்லது ஓய்வளிப்பதா என்பதில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், அந்தமான் நிர்வாகத்திற்கும் பிரச்னை நீடித்து வருகிறது.
 இக்கப்பல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்தமான் நிர்வாகத்திற்குச் சொந்தமானதுதான். ஆனால் கப்பலை தொழில் நுட்ப ரீதியாக இயக்கும் பணியை பொதுத்துறை நிறுவனமான இந்திய கப்பல் கழகம்தான் மேற்கொண்டு வருகிறது.
 வாடகையாக ரூ.11 கோடி விரயம்: எம்.வி.அக்பர் பயணிகள் கப்பல் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி இங்கு நிறுத்தப்பட்டது. அன்றிலிருந்து இங்கு கப்பலை நிறுத்தி வைத்திருப்பதற்காக இதுவரை தோராயமாக ரூ.11 கோடி துறைமுகம் சார்ந்த கட்டணங்களை அந்தமான் நிர்வாகம் செலுத்தியுள்ளது. இக் கப்பல் ஓய்வளிக்கப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்தால் கூட இதை விட சற்று கூடுதலான தொகையே கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஏதேனும் புயல் தாக்கினால் துறைமுகத்திற்கு உள்ளேயே கப்பல் மூழ்கிடும் அபாயம் உள்ளதாகவும் துறைமுக ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 எனவே, இது குறித்து சென்னைத் துறைமுக நிர்வாகம் முழுமையான ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையெனில் கப்பலை உடனடியாக துறைமுகத்தைவிட்டு வெளியே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் பழைய கப்பல்கள் வாங்கி விற்பதில் மிகுந்த அனுபவம் பெற்ற ராஜ்மோகன் ஆபிரஹாம்.
 விரைவில் தீர்வு: இது குறித்து அந்தமான், நிகோபர் நிர்வாக சென்னை அதிகாரி பாண்டே கூறியது:
 நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் இதில் தொடர்பு உள்ளது. இது குறித்து தொடர்ந்து கடிதப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கப்பலுக்கு நிரந்தர ஓய்வளிப்பதா? அல்லது கப்பலை பழுது பார்த்து மேலும் சில ஆண்டுகளுக்கு இயக்குவதா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.
 புதிய பயணிகள் கப்பல் ஒன்று கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது. இக்கப்பல் 2019-ம் ஆண்டு இறுதியில் தனது முதல் பயணத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் பாண்டே.
 அந்தமான்-நிர்வாகம், உள்துறை அமைச்சகம், இந்திய கப்பல் கழகம், சென்னைத் துறைமுகம் ஆகிய அனைத்துமே அரசுத் துறைகளாக இருக்கும் நிலையில் விரயம் எந்தவகையில் ஏற்பட்டாலும் அது ஒட்டுமொத்த பொதுமக்களின் இழப்பாகவே கருதிட முடியும். எனவே இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே அந்தமான் வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com