நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 திமுக தொடர்ந்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தாக்கல் செய்த மனு:
 "கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி பதவி வகித்தபோது, நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை தனது நெருங்கிய உறவினர்களான பி.சுப்பிரமணியம், சந்திரகாந்த் ராமலிங்கம், எஸ்.பி.கே. நாகராஜன், செய்யாத்துரை மற்றும் சேகர் ரெட்டி ஆகியோருக்கு வழங்கி ஆதாயம் அடையும் வகையில் செயல்பட்டுள்ளார்.
 கடந்த 7 ஆண்டுகளாக அவரின் நெருங்கிய உறவினர்களான ராமலிங்கம் உள்ளிட்டோருக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மே மாதம் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகார் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.
 கூடுதல் மனு தாக்கல்: இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என கோரி கூடுதல் மனுவையும் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ மற்றும் வழக்குரைஞர் ஆர்.கிரிராஜன் ஆகியோரும், அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணும் ஆஜராகி வாதிட்டிருந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் தீர்ப்புக்காக இந்த வழக்கை ஒத்திவைத்திருந்தது.
 சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவு:
 "மனுதாரர் தரப்பில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் தமிழக முதல்வரின் நெருங்கிய உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பொது வாழ்வில் இருப்பவர்கள் நேர்மையுடன் இருக்க வேண்டும்.
 அரசியலில் உயர் பதவி வகிக்கக்கூடிய ஒருவர் மீது இது போல குற்றம் சாட்டப்பட்டால், குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு சுதந்திரமான புலன் விசாரணை அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் அவர் மீதுள்ள சந்தேகங்கள் கலையும். இந்த குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து நீதிமன்றமே ஒரு முடிவுக்கு வர முடியாது. இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக போலீஸார் விசாரிப்பது முறையாக இருக்காது.
 எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறேன். ஆரம்பகட்ட விசாரணையை 3 மாத காலத்துக்குள் சிபிஐ முடிக்க வேண்டும். தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு எதிராக மனுதாரர் தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் உள்ளிட்ட அனைத்து ஆதார ஆவணங்களையும், லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு வார காலத்துக்குள் சிபிஐ இணை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை இந்தப் புகாரில் முகாந்திரம் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 மேல் முறையீடு செய்ய வேண்டும்: அதிமுக
 சென்னை, அக். 12: நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யுமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்திடம் அதிமுக வேண்டுகோள் விடுக்கும் என்று கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் கூறினார்.
 ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன், அமைச்சர் டி.ஜெயக்குமார், எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தனர். பொன்னையன் கூறியது:
 நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
 மேல் முறையீடு: நீதிமன்றம் இப்படி உத்தரவு போட்டதே தவறு. இதற்காக மேல்முறையீடு செய்ய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்திடம் அதிமுக வேண்டுகோள் விடுக்கும். ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையிலேயே உத்தரவு பிறக்கப்பட வேண்டும். ஆனால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உலக வங்கி கொடுத்த வழிகாட்டுதல் படியே ஒப்பந்தப்புள்ளிகள் கொடுக்கப்பட்டன. சாலைகளை அமைத்தல், பராமரித்தல், புதுப்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஒப்பந்தப்புள்ளிகள் அளிக்கப்படுகின்றன.
 தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளித்த ஒப்பந்தப்புள்ளி விலைகளை விட நாங்கள் கொடுத்தது குறைவு. அதைப் பற்றி கேள்விகள் இல்லை. நீதிமன்றத்தில் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லியுள்ளோம். ஒரு பொய்யை திருப்பித் திருப்பிச் சொன்னால் உண்மையாகி விடும் எனக் கூறுகிறார்கள். நீதிமன்றம் சொன்னது சரியா, இல்லையா என்பதை மேமுறையீட்டில் சென்று நிரூபிப்போம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com