அகழாய்வில் கிடைத்த பொருள்களை காட்சிப்படுத்துவதே அரசின் நோக்கம்: அமைச்சர் க.பாண்டியராஜன்

தமிழகம் முழுவதும் அகழாய்வு செய்த இடங்களில் கிடைத்த பழைமையான பொருள்களை முறையாக ஆவணப்படுத்தி காட்சிப்படுத்துவதே அரசின் நோக்கம் என
அகழாய்வில் கிடைத்த பொருள்களை காட்சிப்படுத்துவதே அரசின் நோக்கம்: அமைச்சர் க.பாண்டியராஜன்

தமிழகம் முழுவதும் அகழாய்வு செய்த இடங்களில் கிடைத்த பழைமையான பொருள்களை முறையாக ஆவணப்படுத்தி காட்சிப்படுத்துவதே அரசின் நோக்கம் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைப் புதூரில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவடைந்ததை அடுத்து, அதனை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டனர். அப்போது தமிழக தொல்லியல்துறை உதவி இயக்குநர் சிவானந்தம் அகழாய்வுப் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள், அதில் கிடைத்த தொல்பொருள்களின் பட்டியல், அவற்றின் காலம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கிக் கூறினார். அப்போது சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா உடனிருந்தனர்.
 அகழாய்வு செய்த இடத்தை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது:
 கீழடி அகழாய்வில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் 34 குழிகள் தோண்டப்பட்டு கடந்த 6 மாத காலம் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது. இதில் சிறிய தங்க அணிகலன்கள் உள்பட 5,820 பொருள்கள் கிடைத்துள்ளன. இதில் மதம் சார்ந்த குறியீடுகள் எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த பொருள்கள் அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தி விரைவில் ஆய்வுக்கு உள்படுத்தப்பட உள்ளன.
 இவை தவிர கீழடியில் ரூ.1 கோடி மதிப்பில் அகழ் வைப்பகம் விரைவில் அமைக்கப்படும். தொடர்ந்து கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வு பணி தொடங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.
 இந்த பகுதியில் ஏற்கனவே மூன்று கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் 7,818 தொல்பெருள்களின் ஆய்வறிக்கையை விரைந்து வழங்க வேண்டும் என மத்திய தொல்லியல் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வை விட கீழடியில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளில் ஏராளமான தொன்மையான பொருள்கள் கிடைத்துள்ளன. ஆகவே இந்த அகழாய்வு தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 சிந்துவெளி நாகரிகத்தோடு தொடர்புடைய நாகரிகம் தமிழரின் நாகரிகம் என்பதை இங்கு கிடைத்துள்ள தொல் பொருள்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே உறுதி செய்ய முடியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தமிழரின் உண்மையான வரலாறு மறைக்கப்படக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே உள்ள அருங்காட்சியகங்கள் ரூ.12 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளன. மேலும் தேனி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் புதிதாக அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
 இதுவரை தமிழகம் முழுவதும் தமிழக தொல்லியல் துறை சார்பில் சுமார் 40 இடங்களிலும், இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும் அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் அகழாய்வு செய்த இடங்களில் கிடைத்த பழமையான பொருள்களை ஒருங்கிணைத்து முறையாக ஆவணப்படுத்தி, காட்சிப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com