புதுவை ஆளுநர் மாளிகை அதிகாரிகள் முறைகேடாக நிதி வசூல்: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவையில் பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தனியார் நிறுவனங்களிடம் முறைகேடாக நிதி வசூல் செய்வதாக முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுவை ஆளுநர் மாளிகை அதிகாரிகள் முறைகேடாக நிதி வசூல்: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவையில் பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தனியார் நிறுவனங்களிடம் முறைகேடாக நிதி வசூல் செய்வதாக முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
 இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 மத்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களிடமிருந்து புதுவையின் வளர்ச்சிக்காக நிதி பெறுவதற்காக அரசின் சார்பில் பெரு நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு திட்டம் (சிஎஸ்ஆர்) செயல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் தலைவராக நான் (முதல்வர்) உள்ளேன்.
 புதுவை மாநிலத்தில் அரசு நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்குவதற்கும், பள்ளிகளில் பொலிவுறு வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டுவதற்கும் பல தொண்டு நிறுவனங்களும், வங்கிகளும் முன்வந்து நிதி வழங்கி இருக்கின்றன. சிஎஸ்ஆர் குழு மூலமாக அந்த நிதியைப் பெற்று அந்தந்த துறைகளின் திட்டங்களுக்காக வழங்கி வருகிறோம். இந்த நிதி முறையாக, வெளிப்படையாக செலவு செய்யப்படுகிறது.
 சிஎஸ்ஆர் திட்ட விதிமுறைகள் இவ்வாறு இருக்கும்போது, பல நிறுவனங்கள், ரோட்டரி கிளப் உள்ளிட்ட அமைப்புகளை ஆளுநர் மாளிகையில் இருந்து நேரடியாகத் தொடர்பு கொண்டு, சிஎஸ்ஆர் திட்டத்துக்கு வற்புறுத்தி நிதி வசூல் செய்வதாக புகார்கள் வந்துள்ளன. இவ்வாறு ரூ.85 லட்சம் வசூல் செய்துள்ளதாகத் தெரிகிறது. அந்த நிதி யாரிடமிருந்து வசூல் செய்யப்பட்டது என்ற விவரம் இதுவரை தரப்படவில்லை. அந்த நிதியை சிஎஸ்ஆர் குழுவுக்கு அனுப்ப வேண்டுமே தவிர, அதனை செலவு செய்ய ஆளுநர் மாளிகைக்கு அதிகாரம் கிடையாது. இது அதிகார துஷ்பிரயோகம். ஆளுநர் மாளிகையே ஊழலுக்கு உடந்தையாக இருக்கிறது.
 குறிப்பாக, ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்களுடைய சொந்த நலனுக்காக சிஎஸ்ஆர் என்ற பெயரில் பணத்தை வசூல் செய்து பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு ஆளுநர் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த விஷயத்தை உள்துறை அமைச்சரிடமும் தெரிவிப்பேன்.
 ஆலோசகர் நியமனத்திலும் துஷ்பிரயோகம்: இதேபோல, ஆளுநரின் ஆலோசகர் நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்றுள்ளது. துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் செயலராக பணியாற்றி ஓய்வு பெற்ற தேவநீதிதாûஸ உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மீறி தனது ஆலோசகர் மற்றும் சிறப்பு பணி அலுவலராக கிரண் பேடி நியமித்துள்ளார்.
 ஒரு ஆலோசகரான தேவநீதிதாஸ் ஏற்கெனவே தான் செயலாளராக பணிபுரிந்த அறையில் அமர்ந்து கொண்டு, தொலைபேசியில் அதிகாரிகளை அழைத்து ஆளுநர் இல்லாத நேரத்தில் கூட்டம் போடுவது, ஆளுநர் கூட்டும் கூட்டத்தில் பங்கேற்பது என ஒரு செயலரைப் போல செயல்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது.
 எனவே, அவரை நீக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆலோசகர் என்ற முறையில் தேவநீதிதாûஸ ஆளுநர் அழைத்துப் பேசலாம். அதனை மீறி அவர் செயல்படுகிறார். இதற்கு ஆளுநர் உடந்தையாக இருக்கிறார். ஆளுநர் மாளிகையில் அதிகார துஷ்பிரயோகம் நடந்திருக்கிறது.
 இதுவரை இதுதொடர்பாக ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்துக்கு பதில் எதுவும் வரவில்லை. இதுகுறித்து உள்துறை அமைச்சரிடம் நேரிலும் எடுத்துச் சொல்வேன் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com