ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை வழக்கில் துப்பு துலங்கியது: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது

சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடித்த வழக்கில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை வழக்கில் துப்பு துலங்கியது: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது

சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடித்த வழக்கில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
 சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்த 2016 ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு புறப்பட்ட ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்குப் பெட்டியில் ரூ.342 கோடி கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் 169 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. இப்பெட்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
 கொள்ளையர்கள் ஓடும் ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு, 4 பெட்டிகளை உடைத்து, 16-ஆவது எண் பெட்டியில் இருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை முழுமையாகவும், 20-ஆம் எண் பெட்டியில் இருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை பகுதியும் கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவத்தில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
 துப்பு துலங்கியது: இவ்வழக்கில் உடனடியாக துப்பு துலங்காததால், கடந்தாண்டு புதிதாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இது தொடர்பாக முக்கியத் தகவல் அளித்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிசிஐடி அறிவித்தது. இச்சம்பவம் சேலம்-விருத்தாச்சலம் இடையே நடந்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்த சிபிசிஐடி அதிகாரிகள், சேலம்-விருத்தாச்சலம் இடையே அந்த ரயிலில் பயணம் செய்தவர்களின் செல்லிடப்பேசி உரையாடல்களை ஆய்வு செய்தனர்.
 இதில் சந்தேகத்துக்குரிய நபர்களின் பேச்சுகளை மட்டும் தனியாக எடுத்து ஆய்வு செய்தனர். அதேபோல இஸ்ரோ உதவியுடனும் இந்த வழக்கில் போலீஸார் துப்புதுலக்கினர். கொள்ளைச் சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.
 பல கட்ட விசாரணைக்குப் பிறகு மத்தியப் பிரதேசம், குணா மாவட்டத்தைச் சேர்ந்த மோஹர் சிங் தலைமையிலான கும்பல் இக்கொள்ளையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
 சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மோஹர் சிங்கும், அவரது கூட்டாளிகள் சிலரும் வேறு ஒரு வழக்குக்காக குணா மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
 இதனால் கொள்ளையில் சம்பந்தப்பட்ட பிற நபர்களை போலீஸார் தேடினர். சென்னையில் பதுங்கியிருந்த மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லத்தைச் சேர்ந்த ப. தினேஷ் (38), ரோ.ரோஹன் பார்தி (29) ஆகிய இருவரை சிபிசிஐடி அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனர். இவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 முதல்கட்ட விசாரணையில், சின்னசேலத்தில் ஓடும் ரயில் கூரை மீது 5 பேர் ஏறி அமர்ந்து துளையிட்டு, பெட்டிக்குள் இறங்கி, குறிப்பிட்ட பெட்டியில் இருந்த பணத்தை லுங்கியில் கட்டி தயார் நிலையில் இருந்ததும், ரயில் விருத்தாச்சலம் வந்தபோது, அங்கு தயாராக இருந்த கூட்டாளிகளிடம் அந்த மூட்டையை வீசிவிட்டுத் தப்பியதும் தெரியவந்துள்ளது.
 தனிப்படைக்குப் பாராட்டு: இவ்வழக்கில், மனம்தளராமல் பணிபுரிந்த சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில்குமரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.கிருஷ்ணன், உதவி ஆய்வாளர் சாஸ்தா இந்துசேகரன், சிறப்பு உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு, தலைமைக் காவலர் தண்டபாணி ஆகியோரை டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன், சிபிசிஐடி ஏடிஜிபி அம்ரேஷ்பூஜாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com