ஆன்மிகத் தமிழுக்கு தனி இருக்கை அமைக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ் வளர்ச்சிக்காகவும், அதன் மேம்பாட்டுக்காகவும் ஆன்மிகத் தமிழுக்கென தனி இருக்கை ஏற்படுத்த வேண்டும் என மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர்
ஆன்மிகத் தமிழுக்கு தனி இருக்கை அமைக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ் வளர்ச்சிக்காகவும், அதன் மேம்பாட்டுக்காகவும் ஆன்மிகத் தமிழுக்கென தனி இருக்கை ஏற்படுத்த வேண்டும் என மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
 தமிழியக்கம் தொடக்க விழா, தீந்தமிழ்த் திறவுகோல் நூல் வெளியீட்டு விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:
 நம் தாய் மொழியான தமிழ் வளர்ச்சி பெற்றதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தது ஆன்மிகத் தமிழ். தேவாரம், திருவாசகம் போன்ற பல்வேறு நூல்கள் நம்மை நல்வழிக்கு அழைத்துச் செல்கின்றன. இத்தகைய பெருமைமிக்க ஆன்மிகத் தமிழை வளர்க்காமல் பின்னுக்குத் தள்ளிவிட்டோம். அதை வளர்க்க இந்த தமிழியக்கம் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்மிகத் தமிழை வளர்க்க அதற்கென தமிழ் இருக்கை அமைக்க வேண்டும். அதுவும் பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் இந்த இருக்கை அமைக்கப்பட வேண்டும். இதற்காக என் சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கவும் தயாராக உள்ளேன்.
 கடந்த 2015-ஆம் ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 13 ஆயிரம் பள்ளிக் குழந்தைகளை அழைத்து நாடாளுமன்றத்தில் திருக்குறளின் பெருமையை எடுத்துரைத்தவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர், தமிழ் மொழி பேசாத பிற மாநிலக் குழந்தைகள் குறைந்தபட்சம் 100 தமிழ் வார்த்தைகளை எழுத, படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் அனைத்து மாநில முதல்வர்களையும் அழைத்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் என்றார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
 துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: "தீந்தமிழ்த் திறவுகோல்' நூலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட, வாணியம்பாடி மருத்துவர் அக்பர் கெளசர் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து விழாவில் துணை முதல்வர் பேசியது:
 உலகத் தமிழ்ச் சமுதாயத்தை ஒன்றிணைத்து, உரிய வழி காட்டி அவர்களது வாழ்வையும், தமிழையும் மேம்படுத்திக் காக்க வேண்டியது நம் கடமை.
 இதை செம்மையுடன் செயல்படுத்தும் அமைப்புகள் தமிழர் வகிக்கும் பகுதிகளில் உருவாக்கப்பட வேண்டும் என்பதும், அவற்றை ஒருங்கிணைத்துசி செயல்படுத்திட வேண்டும் என்பதும் இன்றைய அவசியத் தேவை. அத்துடன் தமிழுக்கும், உலகத் தமிழின முன்னேற்றத்துக்கும் தொண்டாற்ற முனைந்திருக்கும் "தமிழியக்கம்' அமைப்புக்குத் தேவையான உதவிகளை இந்த அரசு செய்யும். மேலும் இந்நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்றார் அவர்.
 இதையடுத்து தமிழியக்கம் வலைதளத்தை மாநில தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.
 நிகழ்ச்சியில் மோரீஷஸ் அதிபர் (பொறுப்பு) பரமசிவம் பிள்ளை வையாபுரி, கயானா பிரதமர் மோசசு வீராசாமி நாகமுத்து, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செüந்தரராஜன், மூத்த தலைவர் இல. கணேசன், தமிழ் இயக்கத்தின் நிறுவனர்-தலைவர் ஜி.விசுவநாதன், பொதுச் செயலர் முனைவர் அப்துல் காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க தீர்மானம்
 சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழியக்கம் அமைப்பின் தொடக்க விழாவில், தமிழ் இலக்கியத்தில் பட்டம், பட்ட மேற்படிப்புப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 இதர முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
 தமிழகத்தில் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் படித்தே ஆக வேண்டும் என்ற வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பொறுப்பேற்கும்போது தேவநாகிரி எழுத்துருவில் கையொப்பமிட வேண்டும் என்ற நடைமுறைக்கு மாற்றாக அவரவர் தாய்மொழியிலேயே கையொப்பம் இடுவதை மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
 தமிழகத்திலிருந்து புறப்படும் விமானங்கள், பிற பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் விமானங்கள் ஆகியவற்றில் தமிழிலும் அறிவிப்பு செய்யும் வகையில் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com