டீசல் விலை உயர்வு எதிரொலி: வெளியூர் செல்லும் பேருந்துகளில் டீலக்ஸ் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார்

தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் வெளியூர்களுக்கு செல்லும் சாதாரண பேருந்துகளில் டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்படுதாக
டீசல் விலை உயர்வு எதிரொலி: வெளியூர் செல்லும் பேருந்துகளில் டீலக்ஸ் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார்

தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் வெளியூர்களுக்கு செல்லும் சாதாரண பேருந்துகளில் டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்படுதாக பயணிகள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.
 ஏற்கெனவே பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்துக் கழகங்கள், நாள்தோறும் உயர்ந்து வரும் டீசல் விலையால் மேலும் கடுமையான இழப்பைச் சந்தித்து வருகின்றன. ஜனவரி மாதம் 20-ஆம் தேதி ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.62.94 ஆக இருந்தது. தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.79.50 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
 இழப்பை ஈடு செய்ய...: கடந்த ஜனவரி மாதம் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு ஒரு லிட்டர் டீசல் ரூ.17 வரை உயர்ந்துள்ளது. இதனால் அரசுப் போக்குவரத்து கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஏற்கெனவே பேருந்துக் கட்டண உயர்வால் பயணிகள் கூட்டம் குறைந்ததால், வழக்கமாக ஈட்டப்படும் வருவாயும் பெருமளவு குறைந்தது. இந்நிலையில், தற்போது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வரும் டீசல் விலையால் கடும் வருவாய் இழப்பை போக்குவரத்துக் கழகங்கள் சந்தித்து வருகின்றன.
 இந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் வெளியூர்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளின் கட்டணம் மறைமுகமாக மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
 2,500 பேருந்துகளில் கட்டணம் உயர்வு: சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் (எஸ்இடிசி) தவிர விழுப்புரம், கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம் ஆகிய 6 போக்குவரத்து கழகங்கள் மூலமாக இயக்கப்படும் சுமார் 2,500 சாதாரண பேருந்துகள் எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளாக மாற்றம் பெற்றுள்ளன.
 சாதாரணப் பேருந்துக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு 58 பைசாவும், எக்ஸ்பிரஸ் கட்டணம் கிலோ மீட்டருக்கு 85 பைசாவும் அரசு நிர்ணயித்துள்ளது.
 வெளியூர்களுக்கு நாள்தோறும் 6,850 புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், 2,500 சாதாரண பேருந்துகளாக பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகளில் டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு எக்ஸ்பிரஸ் அல்லது டீலக்ஸ் பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மறைமுகமாக அதிக கட்டணத்தை பேருந்து பயணத்துக்கு செலுத்த வேண்டியதுள்ளது என்று பயணிகள் தெரிவித்தனர்.
 வழக்கமாக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சாதாரண கட்டணம் ரூ.120 வசூலிக்கப்படும். தற்போது இந்தப் பேருந்துகள் டீலக்ஸ் ஆக மாற்றப்பட்டு ரூ.175 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
 இதே பாதிப்பு, சென்னை கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, ஆற்காடு, சேலம், தருமபுரி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
 அதேபோல் கோயம்பேட்டில் இருந்து வேலூர் செல்லும் பேருந்துகளில், பூந்தமல்லியில் ஏறி பயணம் செய்யும் பயணியும் கோயம்பேட்டில் இருந்து பயணம் செய்யும் பயணியைப் போல் ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
 உண்மையில் பூந்தமல்லியில் இருந்து வேலூருக்கு செல்வதற்கு ரூ.100 மட்டுமே முன்பு வசூலிக்கப்பட்டு வந்தது என்கின்றனர் பயணிகள்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com