ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற திமுக கனவு கானல் நீராகும்: முதல்வர் பழனிசாமி

ஆட்சியை கவிழ்க்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் என்ற திமுக கனவு கானல் நீராகும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 
ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற திமுக கனவு கானல் நீராகும்: முதல்வர் பழனிசாமி

ஆட்சியை கவிழ்க்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் என்ற திமுக கனவு கானல் நீராகும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

அதிமுக 47-ஆம் ஆண்டு தொடக்க விழா விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

திமுக தலைவராக கருணாநிதி இருந்தவரை ஸ்டாலினால் பதவிக்கு வர முடியவில்லை. அவர் செயல் தலைவராக நியமிக்கப்பட்டாலும் செயல்படாத தலைவராகவே இருந்தார். 

மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படமாட்டார் என்பதால் தான் கருணாநிதி அவருக்கு பதவி வழங்கவில்லை. திமுக-வை கட்சியில் இருந்து ஒரு கம்பெனியாகவே மாற்றிவிட்டார்கள். அதிமுக-வில் அனைவராலும் பதவிக்கு வர முடியும். ஆனால் திமுக-வில் அவர்கள் குடும்பத்தின் ஆட்சி தான் நடைபெறும்.

மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை வழங்கினர். 

ஆட்சியை கவிழ்க்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் என்ற திமுகவின் கனவு கானல் நீராகவே இருக்கும். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கில் என்னை குற்றவாளி என்று நீதிமன்றம் சொல்லவில்லை.

என் மீது திமுக எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திக்க தயார். ஏனென்றால் மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும். எனக்கு மடியில் கனம் இல்லை, எனவே வழியில் பயம் இல்லை. திமுக-வுக்கு எதிராக எங்களுக்கும் வழக்கு தொடர தெரியும்.

விதிமுறைப்படிதான் நெடுஞ்சாலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. நெடுஞ்சாலை ஒப்பந்தம் குறித்து திமுக பொய்யான புகார் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். இருப்பினும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிசீலிப்போம். மீனவர்கள் சிறைப்பிடிப்பு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com