தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும்

தண்ணீரை கனிமவளப் பிரிவில் இருந்து நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும்

தண்ணீரை கனிமவளப் பிரிவில் இருந்து நீக்க வேண்டும், வாரியம் அமைக்க வேண்டும், சுங்க வரி குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். 

சட்ட விரோதமான முறையில் நிலத்தடி நீர் உறிஞ்சுதலைத் தடை செய்தும் வணிக பயன்பாட்டுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சுதலை முறைப்படுத்த வேண்டும் என கடந்த அக். 3-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சென்னை- காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை நீக்கக் கோரியும், தண்ணீரை கனிமவளப் பிரிவில் இருந்து நீக்க கோரியும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 4,500 தண்ணீர் லாரிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன.

இந்நிலையில், முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்துடன் தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.   

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி நிஜலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது, 

"இந்தப் பேச்சுவார்த்தையில், அரசு அதிகாரிகள் தண்ணீர் எடுங்கள் என்றும் தெரிவிக்கவில்லை, எடுக்கவேண்டாம் என்றும் தெரிவிக்கவில்லை. இது நீதிமன்றத்தின் உத்தரவு என்றனர். தண்ணீரை கனிமவளப் பிரிவில் இருந்து நீக்க வேண்டும் என்று முறையாக மனு கொடுத்துள்ளோம். 

இந்த வேலைநிறுத்தத்தால் ஐடி நிறுவனம், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தான் தலையிட்டு நல்ல தீர்வை கூறவேண்டும். 

எங்களுக்கு என வாரியம் அமைக்க வேண்டும். தண்ணீர் லாரி தொழிலை வரன்முறைப்படுத்த வேண்டும். சுங்கவரியை குறைக்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். 

தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கும் வரை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com