நுண்ணீர் பாசனம்: விவசாயிகளை ஊக்குவிக்க மானியம்: தமிழக அரசு அறிவிப்பு

நுண்ணீர் பாசன அமைப்புகள் மூலம் விவசாயிகளை ஊக்குவிக்க மானியம் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


நுண்ணீர் பாசன அமைப்புகள் மூலம் விவசாயிகளை ஊக்குவிக்க மானியம் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை வேளாண்மைத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நுண்ணீர் பாசன அமைப்புகளை உருவாக்குவதற்கு சிறு-குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 10 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் நுண்ணீர் பாசன அமைப்புகள் ரூ.1,500 கோடி மானியத்தில் உருவாக்கி விவசாயிகள் பயனடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாசன நீர் வசதி இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, அதன் மூலம் அதிகளவு பயிர் செய்யும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான உத்தரவு கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 
அதன்படி, நுண்ணீர் பாசன முறையை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்தத் திட்டத்தின்கீழ், நுண்ணீர் பாசன முறைக்காக வழங்கப்படும் மானியம் மட்டுமல்லாது, குழாய்க் கிணறு-துளைக்கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு ஆயில் என்ஜின்-மின்மோட்டார் வசதி ஏற்படுத்துதல், பாசன நீரினை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்களை நிறுவுதல், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற துணைநிலை நீர் மேலாண்மைப் பணிகளுக்காகவும் கூடுதல் மனியம் அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
எவ்வளவு கிடைக்கும்?: அதன்படி, நிலத்தடி நீர் பாதுகாப்பான ஆழத்தில் உள்ள குறுவட்டங்களில் குழாய் அல்லது துளைக் கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 ஆயிரமும் அளிக்கப்படும். டீசல் பம்புசெட் அல்லது மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீதத் தொகை ரூ.15 ஆயிரத்துக்கு மிகாமல் வழங்கப்படும்.
வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டு செல்லும் வகையில் நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீதத் தொகை ஹெக்டேருக்கு ரூ.10,000-த்துக்கு மிகாமலும், பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த் தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு ஒரு பயனாளிக்கு ஆகும் செலவில் 50 சதவீதத் தொகை ஒரு கன மீட்டருக்கு ரூ.350-க்கு மிகாமலும் நிதியுதவி ரூ.40,000-த்துக்கு மிகாமலும் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளில் குழாய்க்கிணறு அல்லது துளைக் கிணறு அமைக்கும் பணி, தமிழகத்தில் 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாதுகாப்பான ஆழத்தில் உள்ள 437 பாதுகாப்பான குறு வட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இதர மூன்று பணிகள் அனைத்து குறு வட்டங்களிலும் செயல்படுத்தும் வகையில் மானிய உதவித் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
மானியம் பெறுவதற்கு விவசாயிகள் வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் வேளாண்மை அல்லது தோட்டக்கலை துணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர், வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் அல்லது உதவி செயற்பொறியாளர், வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
மானியத் தொகை விடுவிக்கப்பட்ட 15 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் சேமிப்புக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com