தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்: அரசுடனான பேச்சுக்குப் பிறகு அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வந்த தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் புதன்கிழமை இரவு வாபஸ் பெறப்பட்டது
தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்: அரசுடனான பேச்சுக்குப் பிறகு அறிவிப்பு


தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வந்த தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் புதன்கிழமை இரவு வாபஸ் பெறப்பட்டது. கேன் குடிநீர் உரிமையாளர்கள் போராட்டமும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. 
தமிழக அரசுடன் இரண்டு கட்டங்களாக புதன்கிழமை நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்ட வாபஸ் அறிவிப்பை உரிமையாளர்கள்சங்க நிர்வாகிகள் வெளியிட்டனர். பிரச்னைக்குத் தீர்வு காண குழு அமைப்பதாக தமிழக அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்ட வாபஸ் பெறப்பட்டது.
போராட்டம் நடத்தியது ஏன்?: தமிழகத்தில் அனுமதியில்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்வோர் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து கேன் தண்ணீர் உரிமையாளர் சங்கத்தினரும், தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் தனித்தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15-ஆம் தேதி முதல் இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது.
மூடப்பட்ட கடைகள்: கேன் குடிநீர் உரிமையாளர்கள் மற்றும் தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் சென்னையில் புதன்கிழமையன்று பல உணவு விடுதிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. 
இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கேன் குடிநீர் உற்பத்தியாளர் மற்றும் தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.
தலைமைச் செயலகத்தில் பேச்சு: தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் துறை நிர்வாக இயக்குநர் அசோக் டோங்ரே உள்ளிட்டோர் முன்னிலையில் பேச்சு நடந்தது. சுமார் 2 மணி நேரம் வரை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, கேன் குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தினரும், தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினரும் தனித்தனியே பேட்டி அளித்தனர். அதன் விவரம்:-
முரளி (கேன் குடிநீர் உரிமையாளர் சங்கம்): செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து கேன் குடிநீர் உரிமையாளர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தனர். அதிகளவு தண்ணீர் எடுத்து விற்பனை செய்யும் நிறுவனங்களும் மக்களின் தேவைக்காக விநியோகம் செய்து வருகிறார்கள். குடிநீர் தொழிற்சாலை எதையும் மூடக் கூடாது என்பதுதான் பிரதான கோரிக்கையாக உள்ளது. அதை வைத்து போராட்டம் நடத்தினோம். அரசாணையில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தினோம். இதனைச் சாதகமாக பரிசீலிப்பதாகக் கூறினர். திங்களன்று விரிவான கோரிக்கை மனுவுடன் வரக் கூறியுள்ளனர். அனைத்து கோரிக்கைகளும் அடங்கிய அம்சங்களை விரிவாக ஆலோசித்து உத்தரவு பிறப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் நல்ல விஷயங்களை அரசு எங்களுக்கு செய்து தருவார்கள் என நம்புகிறோம். நீதிமன்ற உத்தரவுக்கு பாதிப்பு ஏற்படாமல் இதனை செய்து தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அனைத்து நிறுவனங்களுக்கும் உரிமம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, நல்லெண்ண நம்பிக்கையில் போராட்டத்தை விலக்கிக் கொள்கிறோம். எங்களது நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படும் என்றார்.
நிஜலிங்கம் (தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம்): தண்ணீர் எடுக்க வேண்டுமென்றோ, எடுக்கலாம் என்றோ கூறவில்லை. நான்கு நாள்கள் அவகாசம் கொடுத்து கருத்துகளைத் தெரிவிக்கக் கூறியுள்ளனர். முறையான வரன்முறை செய்து தர வேண்டுமெனக் கூறியுள்ளோம். கனிம வளப் பிரிவில் இருந்து தண்ணீரை நீக்க வேண்டுமென வலியுறுத்துள்ளோம். தண்ணீரை எடுக்க அனுமதி கொடுத்தால் உடனடியாக பணிக்குத் திரும்ப தயாராக உள்ளோம். பொது மக்களுக்கு பெரும் சிரமம் உள்ளது. ஐ.டி., பார்க், நட்சத்திர ஓட்டல்கள், வணிக வளாகங்கள் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டதாக செய்திகள் வருகின்றன. அரசு செய்ய வேண்டிய பணியை நாங்கள் செய்தோம் என்றார் நிஜலிங்கம். 
மீண்டும் பேச்சு: முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை பொதுப் பணித் துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
குழு அமைப்பதாக அரசு உறுதி: இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தனியார் குடிநீர் லாரிகள் தண்ணீர் எடுப்பது தொடர்பாக வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்க குழு அமைக்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வேலைநிறுத்த வாபஸ் அறிவிப்பை தனியார் குடிநீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com