25 மக்களவைத் தொகுதிகளில் திமுக போட்டி: மு.க.ஸ்டாலினிடம் உயர்நிலைக் குழு வலியுறுத்தல்

வரும் மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் திமுக கட்டாயம் போட்டியிட வேண்டும் என்றும் மீதமுள்ள புதுச்சேரி உள்ளிட்ட 15 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம்


வரும் மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் திமுக கட்டாயம் போட்டியிட வேண்டும் என்றும் மீதமுள்ள புதுச்சேரி உள்ளிட்ட 15 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் உயர்நிலைக் குழுவினர் புதன்கிழமை வலியுறுத்தினர்.
திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் ஆர்க்காடு வீராசாமி, ஆ.ராசா, தயாநிதி மாறன், பொன்முடி, எ.வ.வேலு, ரகுமான்கான், கே.என்.நேரு, பொன் முத்துராமலிங்கம் உள்பட 20 -க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பொதுக்குழுவில் முடிவு: கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது:
திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்ற குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்தனர். வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்தும், ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்ந்து வந்தால் எப்படி அதை சந்திப்பது எப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாள்வது என்பதைப் பற்றியெல்லாம் அலசி ஆராய்ந்துள்ளோம்.
ஏற்கெனவே, திமுகவோடு இருக்கும் தோழமைக் கட்சிகளின் நிலைமைகளைப் பற்றியும் பேசியிருக்கிறோம். என்னதான் உயர்நிலைக் குழுவிலே பேசி முடித்திருந்தாலும் இது குறித்து விரைவில் தலைமைக் கழக நிர்வாகிகளோடு கலந்துபேசி, அதற்குப் பின்னால் திமுகவின் இதயமாக இருக்கக்கூடிய பொதுக் குழுவில் முடிவு எடுத்து தேர்தல் வரும் நேரத்தில் அதுபற்றிய முடிவுகளை அறிவிப்போம்.
எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதித்தோம்.
அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறக்கப்படும் தேதி முடிவு செய்யப்பட்டதற்குப் பிறகு முறையாக அனைவருக்கும் தெரிவிக்கப்படும் என்றார்.
மெகா கூட்டணி: கூட்டத்தில் பேசிய அனைவரும் திமுக தலைமையில் வலுவான மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறினர். அதிமுக ஆட்சிக்கு எதிராக தற்போது திமுகவோடு இணைந்து போராட்டம் நடத்தி வரும் அனைத்துக் கட்சிகளும் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதனை மு.க.ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டுள்ளார். நிச்சயம் வலுவான கூட்டணியாக அமையும் என்று நிர்வாகிகளுக்கு அவர் உறுதி அளித்துள்ளார்.
காங்கிரஸ் இடம் பெறும்: திமுகவின் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுவது சந்தேகம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளது குறித்து கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. இதற்கு, துரைமுருகன் உள்ளிட்ட சிலர் பேசும்போது, கமல் பேச்சைப் பெரிதுபடுத்த வேண்டாம். 
காங்கிரஸின் அகில இந்தியத் தலைமை திமுகவுடன் கூட்டணி அமைப்பதில் உறுதியாக உள்ளது. இதனை ப.சிதம்பரமும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறும் என்று கூறியுள்ளனர்.
பாஜகவுக்கு அடுத்த நிலையில் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சியாக காங்கிரஸ்தான் உள்ளது. மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை காங்கிரஸின் பலம் அவசியம் தேவைப்படும். காங்கிரஸ் எனும் அடையாளத்தை நாம் இழந்துவிடக் கூடாது.
அதேசமயம், திமுகவின் தன்மானத்தையும் இழந்துவிடக் கூடாது என்று மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
25 தொகுதிகளில் போட்டி: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளில் 25 தொகுதிகளில் திமுக கட்டாயம் போட்டியிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலினை அனைத்து நிர்வாகிகளுமே வலியுறுத்தியுள்ளனர்.
மீதமுள்ள 15 தொகுதிகளை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும். மெகா கூட்டணியாக அமைந்தால் ஒன்றிரண்டு தொகுதிகளையும் திமுக குறைத்துக் கொள்ளலாம். ஆனால், 25 தொகுதிகளில் போட்டியிட்டு, அதிக இடங்களில் வெற்றிபெற்றால்தான் திமுகவின் பலத்தை நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். அதனால், 25 தொகுதிகள் என்ற முடிவில் உறுதியாக இருங்கள் என்று ஸ்டாலினிடம் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதை ஸ்டாலினும் ஆமோதித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com