பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.


பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை இரவு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
எனது உறவினருக்கு ஒப்பந்தம் வழங்கியதாக திமுகவினர் தவறான குற்றச்சாட்டைக் கூறி வருகின்றனர். உலக வங்கி நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஆட்சியாளர்களின் நேரடி ரத்த சொந்தங்களுக்கு ஒப்பந்தப் பணிகளை வழங்கக் கூடாது என்ற விதியை முறையாகப் பின்பற்றி வருகிறோம்.
கடந்த திமுக ஆட்சியின்போது நான்கு வழிச் சாலைத் திட்டம் உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகளுக்கு படிப்படியாக நிதியை உயர்த்தி, 70 சதவீதம் வரை கூடுதலாக நிதியை ஒதுக்கினர். ஒரு கி.மீ. தொலைவு சாலைக்கு ரூ. 12 கோடியே 40 லட்சம் அளவில் ஒப்பந்தம் போட்டனர்.
குறிப்பாக, ஆற்காடு, விழுப்புரம், போளூர், சிதம்பரம், திருக்கோவிலூர் நெடுஞ்சாலைப் பணிகளின்போது, ரூ. 611 கோடிக்கு ஒப்பந்தம் கோரிய திமுக அரசு, பின்னர் ரூ. 165 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்தது.
இதேபோல, நாகப்பட்டினம் சாலைத் திட்டத்தில் ரூ. 198.72 கோடிக்கு ஒப்பந்தம் விட்டு, கூடுதலாக ரூ. 72.49 கோடி ஒதுக்கி, பணியை மேற்கொண்டனர்.
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்ட ரூ. 200 கோடிக்கு ஒப்பந்தம்விட்டு, ரூ. 347 கோடியில்தான் அந்தப் பணியை முடித்தனர். இதில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிக்க அமைத்த ஆணையத்துக்குத் தடையாணை பெற்று காலம் கடத்தினர். இதுதொடர்பான வழக்கைச் சந்திக்காமல் தற்போதும் மு.க.ஸ்டாலின் தடை கோருகிறார்.
தற்போது, மதுரை வட்டச் சாலைத் திட்டத்துக்காக 18 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டதாக திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி புகார் கூறியுள்ளார். அந்தத் திட்டத்துடன் குடிநீர், மின் பணிகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட கூடுதல் நிதி குறித்து அவர் தவறாகப் புகார் கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் நடைபெற்று வரும் ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகளுக்கு வாய்ப்பே இல்லை என்றார் முதல்வர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர், அவற்றின் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் என்றார். மேலும், கள்ளக்குறிச்சி தனி மாவட்டக் கோரிக்கை தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com