வழக்குகளைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எந்த வழக்கையும் கண்டு அஞ்சக்கூடியவர்கள் அல்லர் அதிமுகவினர். எதையும் எதிர்கொள்ளும் தைரியம்
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக 47-ஆம் ஆண்டு தொடக்க விழாப் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் தமிழக முதல்வர்
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக 47-ஆம் ஆண்டு தொடக்க விழாப் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் தமிழக முதல்வர்


எந்த வழக்கையும் கண்டு அஞ்சக்கூடியவர்கள் அல்லர் அதிமுகவினர். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள். எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். 
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக 47ஆம் ஆண்டு தொடக்க விழா, பொதுக் கூட்டத் திடலில் உள்ள கட்சி கொடிக் கம்பத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கொடியை ஏற்றி வைத்து, 47-ஆம் ஆண்டையொட்டி கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
தமிழகம் அதிமுகவின் கோட்டை: அதைத் தொடர்ந்து, அவர் பேசியதாவது: தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவும், அண்ணாவின் லட்சியத்தை நிறைவேற்றவும், அதிமுகவை கடந்த 1972-இல் எம்ஜிஆர் தொடங்கினார். 28 ஆண்டுகள் ஆட்சி செய்து, அதிமுக தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்ட உதவிகளை அளித்து, தமிழகத்தை தனது கோட்டையாக வைத்துள்ளது. தமிழகத்தில் 28 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள இயக்கம் அதிமுக மட்டுமே. 
வழக்குகளைக் கண்டு அஞ்சவில்லை: ஆட்சிக் கலைப்பு நடவடிக்கைகள் எடுபடாததால் வழக்கு போட்டு அவப்பெயரை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். எந்த வழக்கையும் கண்டு அஞ்சக்கூடியவர்கள் அல்லர் அதிமுகவினர். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள். எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. 
புதிய தலைமைச் செயலகக் கட்டடம் தொடர்பான வழக்கு விசாரணை என்ற உடனேயே, அதற்கு மு.க.ஸ்டாலின் தடை வாங்குகிறார். விசாரணையைக் கண்டு நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்? என் மீது புகார் அளித்துள்ளீர்கள், நான் பதவியில் இருப்பதால், நீதிமன்றம் சரியாக விசாரிக்கச் சொல்லியிருக்கிறதே தவிர, என்னைக் குற்றவாளி எனக் கூறவில்லை. இருப்பினும், என் மீதான புகார் விசாரணையை நேரடியாக எதிர்கொள்கிறேன். 
திமுக ஒரு கம்பெனி: வாரிசு அரசியலை நடத்தும் திமுக ஒரு கட்சியே அல்ல, அது ஒரு கம்பெனி. அந்தக் கட்சித் தலைமை முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் வாரிசு அரசியல் நடத்தி வருகின்றனர். மாவட்டந்தோறும் தந்தை, மகன் எனப் பதவியில் உள்ளனர். ஆட்சியை கைப்பற்றும் திமுகவின் கனவு ஒரு நாளும் நிறைவேறாது. 
தினகரன் கட்சி காணாமல் போகும்: டிடிவி தினகரன் தொடங்கிய கட்சியோடு, அதிமுகவை இணைக்க வேண்டுமாம். அதிமுக அகில இந்திய அளவில் பெரிய கட்சி மட்டுமன்றி, மக்களுக்காக சாதனைகள் செய்து வரலாறு படைத்த கட்சியை அவருடன் சேர்க்க வேண்டுமாம். அவரது கட்சி வரும் தேர்தலோடு காணாமல் போய்விடும். 
சினிமாவிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் நுழைந்துள்ள நடிகர் கமல்ஹாசன் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கிறார். ஜெயலலிதா அரசியலுக்கு வராதபோதே தேசப்பற்றோடு நாட்டுக்கான யுத்த நிதிக்கு தனது நகைகளையெல்லாம் பிரதமரிடம் வழங்கியவர். அவரைப் பற்றிப் பேச கமல்ஹாசனுக்கு தகுதி இல்லை.
யாருடனும் கூட்டணி இல்லை: தற்போது பாஜக மோசமான கட்சி என விமர்சிக்கும் திமுகவினர், ஏற்கெனவே மத்தியில் அவர்களுடன் கூட்டணி வைத்து பதவி சுகம் அனுபவித்தபோது , அது மதவாத கட்சியாக தெரியவில்லையா? பிறகு பதவிக்காக காங்கிரஸுடன் கூட்டணி வைத்தனர். திமுகவுக்கு கொள்கையே கிடையாது.
தற்போது, நாங்கள் யாருடனும் கூட்டணியில் இல்லை. தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி வைப்போம். தேசியக் கட்சிகள் தமிழகத்தை நம்பியுள்ளதால், நமக்கான திட்டங்களைப் பெற அதிக மக்களவைத் தொகுதிகளை வென்றெடுக்க வேண்டும் என்றார் முதல்வர் பழனிசாமி.
கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் மோகன், ஆனந்தன், செஞ்சி ராமச்சந்திரன், எம்.பி.க்கள் இரா.லட்சுமணன், காமராஜ், ராஜேந்திரன், ஏழுமலை, எம்எல்ஏக்கள் சக்கரபாணி, முருகுமாறன், முன்னாள் எம்எல்ஏ அழகுவேல்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள், அதிமுகவினர் திரளாகக் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com