விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு இரு ஆண்டுகளில் 25 சதவீதம் குறைந்துள்ளது: சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்

சுகாதாரத் துறையின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் கடந்த இரண்டு ஆண்டுகளில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 25 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை


சுகாதாரத் துறையின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் கடந்த இரண்டு ஆண்டுகளில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 25 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனை, அப்பல்லோ ஷைன் அறக்கட்டளை சார்பில் உலக விபத்து சிகிச்சை, உடல், தலைக்காய சிகிச்சை தினத்தையொட்டி, சாலைப் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் நிறைவு விழா, சிறப்பாகப் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது:
இந்தியாவில் நாளொன்றுக்கு சராசரியாக 400 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத் துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தன.
மேலும், 108, 1066 ஆகியவற்றின் விரைவான சேவை, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் விபத்து சிகிச்சை மையங்கள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளது.
சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவது, செல்லிடப்பேசியை இயக்கிக் கொண்டும், மது அருந்திவிட்டும் வாகனம் ஓட்டுவது போன்ற காரணங்களால்தான் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது, தலைக்கவசம் அணிவதால் பல்வேறு பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதால் விபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்றார் ராதாகிருஷ்ணன்.
கௌரவிப்பு: முன்னதாக, சிறப்பாகப் பணியாற்றிய 108, 1066 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், காவல் துறை கூடுதல் டிஜிபி ரவி ஆகியோர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான மண்டல இயக்குநர் டாக்டர் சத்யபாமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com