தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி வசூல்: துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா?: புதுவை முதல்வர் கேள்வி

தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி வசூல் செய்யும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு உள்ளதா? என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் நாராயணசாமி. உடன் அரசுக் கொறடா ஆர்.கே.ஆர்.அனந்தராமன். 
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் நாராயணசாமி. உடன் அரசுக் கொறடா ஆர்.கே.ஆர்.அனந்தராமன். 


தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி வசூல் செய்யும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு உள்ளதா? என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தனியார் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை (சிஎஸ்ஆர்) பெற்று நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பணியானது விதிமுறைகளை மீறும் செயல் என்றும், முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் அந்த மாநில முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் நாராயணசாமி மேலும் கூறியதாவது: 
துணைநிலை ஆளுநருக்கு நிதியைக் கையாளும் உரிமை இல்லை. சமூகப் பொறுப்புணர்வு நிதியைப் பெறுவது தொடர்பாக கடந்த 2011 -ஆம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவராக முதல்வர் உள்ளார். இந்தக் குழு வசூலித்த நிதி ரூ. 4 கோடி வரை உள்ளது. இந்த நிதியைக் கொண்டு நீர்நிலைகளைத் தூர்வாருதல், மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த நிலையில், ஆளுநர் அலுவலகம் தனியார் நிதி பங்களிப்பு தொடர்பாக தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டுமெனில் ஏரி, குளங்களின் தன்மை, தூர்வார ஆகும் செலவு போன்றவற்றைப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் திட்ட மதிப்பீடு செய்து, அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். ஆனால், எந்தவிதமான திட்ட மதிப்பீடும் இல்லாமல் குளத்தைத் தூர்வாருவது என்றால், அதை எப்படிக் கணக்கிட முடியும்? எனவே, இதில் முறைகேடு நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
ஆளுநரும் இதுவரையில் எவ்வளவு நிதி வசூலிக்கப்பட்டது, அந்தத் தொகை எவ்வாறு செலவிடப்பட்டது, யாரிடமிருந்தெல்லாம் பணம் பெறப்பட்டது என்ற விவரத்தைத் தெரிவிக்கவில்லை.
எனவே, தனியார் நிறுவனங்களிடமிருந்து சிஎஸ்ஆர் நிதியைப் பெற்றதில் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பியுள்ளோம். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். மேலும், ஆளுநரும் தனக்கோ, தனது அலுவலகத்துக்கோ சிஎஸ்ஆர் நிதியை வசூலிக்கும் உரிமை உள்ளதா? பணத்தை வசூலிக்க அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் உள்ளதா? எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது போன்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி. பேட்டியின் போது, அரசுக் கொறடா 
ஆர்.கே.ஆர்.அனந்தராமன் உடனிருந்தார்.

முதல்வர் பொய் சொல்கிறார்
தனியார் நிறுவனங்களின் நிதி உதவியுடன் நீர்நிலைகளைத் தூர்வாரும் விவகாரத்தில் புதுவை முதல்வர் பொய்யுரைப்பதாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கூறினார்.
புதுவையில் உள்ள தனியார் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை (சிஎஸ்ஆர்) துணைநிலை ஆளுநர் தனது அலுவலகம் மூலமாக பெற்று நீர்நிலைகளைத் தூர்வாரி வருவதாகவும், இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் மாநில முதல்வர் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வெளியிட்ட அறிக்கை:
தனியார் நிறுவனங்களின் சமூகப் 
பொறுப்புணர்வு நிதி விவகாரத்தில் முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து பொய் மேல் பொய் கூறி வருகிறார். பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறினால், அது உண்மையாகிவிடாது.
புதுச்சேரியில் நீர்நிலைகளை மேம்படுத்த தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் அரசுக்கு ரூ. 20 கோடி அளவுக்கு சேமிக்கப்பட்டது. நீராதாரமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
நீராதாரப் பணிகளை முதல்வர் விரும்பவில்லையா? தேவையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதேன்?
ஆளுநர் மாளிகை மக்கள் சேவைக்காகத்தான் உள்ளதே தவிர, இங்கு எந்த நிதிப் பரிமாற்றமும் நடைபெறவில்லை என அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com