தாமிரவருணி மஹா புஷ்கரம்: 9ஆவது நாளாக புனித நீராடிய பக்தர்கள்

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின் 9ஆவது நாளான வெள்ளிக்கிழமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள படித்துறைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித
பாபநாசம் தாமிரவருணியில் நீராடி வழிபடுகிறார் அமைச்சர் செங்கோட்டையன்
பாபநாசம் தாமிரவருணியில் நீராடி வழிபடுகிறார் அமைச்சர் செங்கோட்டையன்


தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின் 9ஆவது நாளான வெள்ளிக்கிழமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள படித்துறைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.
குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கரம் நடைபெறும். அதன்படி குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்துள்ள நிலையில் 144 ஆண்டுகளுக்குப் பின்பு மஹா புஷ்கர விழாவாக தாமிரவருணியில் நிகழாண்டில் கொண்டாடப்படுகிறது.
பொதிகை மலை முதல் புன்னக்காயல் வரை 149 கி.மீ. பயணிக்கும் தாமிரவருணி நதியில் மொத்தம் 143 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. அவற்றில் 64 தீர்த்தக்கட்டங்கள் மட்டுமே பக்தர்கள் நீராடும் வகையில் உள்ளன. 
இங்கு கடந்த 11ஆம் தேதி மஹா புஷ்கரம் விழா தொடங்கியது. முதல் நாளில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரவருணியில் நீராடி வருகின்றனர்.
9ஆவது நாளான வெள்ளிக்கிழமை தீர்த்தக்கட்டங்களில் சிறப்புத் தீபாராதனைகள் நடைபெற்றன. அதன்பின்பு பக்தர்கள் தாமிரவருணியில் புனித நீராடினர். தாமிரவருணியை போற்றும் பாடல்களையும், திருப்பாவை, திருவெம்பாவை, திருவாசக பாடல்களையும் பக்தர்கள் பாடி இறைவனை வழிபட்டனர்.
ஹயக்ரீவ ஹோமம்: திருநெல்வேலி சந்திப்பு அருகே கைலாசபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக தைப்பூச மண்டப படித்துறையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. படித்துறையில் காலையில் திருப்பள்ளியெழுச்சி, மங்கள நாகசுவர இசை, சங்கல்ப ஸ்நானம் ஆகியவை நடைபெற்றன.
அதன்பின்பு சதுர்வேத பாராயணம், ருத்ர ஜெபம், ஹோமம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. திருநெல்வேலி குறுக்குத்துறையில் மாலையில் திருநெல்வேலி மஹோத்மியம் என்ற தலைப்பில் வடகுடி சுந்தரராம தீட்சிதரின் உபன்யாசமும், ஹுஜைனின் பக்திச் சொற்பொழிவும் நடைபெற்றது. 
சீவலப்பேரியில் துர்காம்பிகா தேவஸ்தானம் டிரஸ்ட் சார்பில் தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. ஜடாயு தீர்த்தக்கட்டத்தில் பெண்கள் மலர்களைத் தூவி வழிபாடு செய்தனர்.
அமைச்சர்கள் வழிபாடு: தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பாபநாசம் தாமிரவருணி நதியில் வியாழக்கிழமை புனித நீராடி, பாபநாசம் சிவன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். முருகையாபாண்டியன், செல்வ மோகன்தாஸ் பாண்டியன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலெட்சுமி, தனது குடும்பத்தினருடன் வந்து தாமிரவருணியில் நீராடி வழிபட்டார். அம்பாசமுத்திரம் காசிநாதர் கோயில் படித்துறையில் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் ராஜலட்சுமி இருவரும் வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com