பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி : யெச்சூரி

பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மார்க்சிஸ்ட் ஈடுபட்டு வருவதாக அக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி : யெச்சூரி

பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மார்க்சிஸ்ட் ஈடுபட்டு வருவதாக அக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் வெள்ளிக்கிழமை கூறியது: மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம். அதே போன்று மாநில அளவிலான கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
சபரிமலை விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. இந்துக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடனே இந்த வேடத்தை பாஜக போடுகிறது. இது தவறானது. அனைத்து இடங்களிலும் ஆண், பெண் சமத்துவம் இருக்க வேண்டும். சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள காங்கிரஸ் எதிர்ப்பதும் வருத்தமளிக்கிறது என்றார்.
முன்னதாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கருத்துரிமை போற்றுதல் ஒன்றுகூடல் நிகழ்ச்சி காமராஜர் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சீதாராம் யெச்சூரி பேசியது: கருத்துரிமைக்கு எதிரான இருண்ட சூழலில் உள்ளோம். இந்த இருளில் ஒளியைப் பாய்ச்ச வேண்டியது படைப்பாளர்களின் கடமை. ஆளும் வர்க்கம் எப்போதும் மாற்றுக் கருத்துகளை அனுமதிப்பது இல்லை. அதை நசுக்கவே பார்க்கும். தன்னுடைய கருத்தைத் திணிக்கும் முயற்சிக்கும். இது சாக்ரடீஸ் காலத்திலிருந்து உள்ளது. மாற்றுக் கருத்தை மதிக்காததை ஏற்கவே முடியாது. கருத்துரிமைக்கு ஆதரவாக அனைவரும் போராட முன்வரவேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்ஷின் கட்டுரைகள் தொகுப்பான சிந்தனைக்கு மரணமில்லை என்ற மொழிபெயர்ப்பு நூலை மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வெளியிட சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.நீலா பெற்றுக் கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி, நடிகர் சத்யராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் துரை.ரவிக்குமார், துணை பொதுச் செயலர் ஆளுர் ஷா நவாஸ், நக்கீரன் கோபால், எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வம், ஆதவன் தீட்சண்யா, சு.வெங்கடேசன் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com