ஆண்டவன் ஆசிரமத்தின் 12ஆவது ஆச்சாரியனாக ஸ்ரீமன் யாமுனாச்சாரியார் சுவாமி இன்று பதவியேற்பு

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 12 ஆவது ஆச்சாரியனாக ஸ்ரீமன் யாமுனாச்சாரியார் சுவாமி ஞாயிற்றுக்கிழமை (அக்.21) பதவியேற்கிறார்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 12 ஆவது ஆச்சாரியனாக ஸ்ரீமன் யாமுனாச்சாரியார் சுவாமி ஞாயிற்றுக்கிழமை (அக்.21) பதவியேற்கிறார்.
 ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத் தலைவரும், உயில் நிறைவேற்றுக் குழுத் தலைவருமான ஆர்.ராஜகோபால் சனிக்கிழமை அளித்த பேட்டி:
 ஸ்ரீவைஷ்ணவ வடகலை முநித்ரய சம்பிரதாயத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தாபனமாக சுமார் 300 ஆண்டுகள் தொன்மையான ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் இதுவரை 11 மகான்கள் எழுந்தருளி, தொண்டாற்றி அருள்புரிந்து வந்துள்ளனர். ஆசிரமத்தின் 11 ஆவது ஆச்சாரியனாக இருந்து 29 ஆண்டுகள் சிறப்பாக நடத்தி வந்த ஸ்ரீமத் முஷ்ணம் ஆண்டவன் சுவாமிகள் கடந்த மார்ச் மாதம் முக்தி அடைந்தார். அவருக்குப் பின்னர் 12 ஆவது ஆச்சாரியனாக ஸ்ரீமன் யாமுனாச்சாரியார் சுவாமி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க உள்ளார்.
 1968 ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் பாமாலட்சுமி - ஸ்ரீமான் வராஹாச்சாரியார் ( பின்னாளில் ஸ்ரீ முஷ்ணம் ஆண்டவனாக பதவி வகித்தவர்) சுவாமிக்கு மகனாக பிறந்தார். சாஸ்திர பூஷணம் என்ற விருதை 2005 -ஆம் ஆண்டு பெற்ற இவருக்கு, ராதா அம்மையாருடன் கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சன்யாஸ ஆசிரமத்தை ஏற்பதற்கான முக்கிய மந்திரங்கள் 2012 ஆம் ஆண்டே ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவனால் உபதேசம் செய்யப்பட்டது. முக்கியமாகக் கருதப்படும் க்ரந்த காலசேஷபங்களை ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன்
 சுவாமிகள், ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் சுவாமிகள், ஸ்ரீ என்எஸ்ஆர் சுவாமிகள் மூலம் பெற்றுள்ளார். எம்.ஏ, எம்.பில், பி.எச்.டி. போன்ற பல பட்டங்களைப் பெற்று, பல சாஸ்திரங்களில் தேர்ந்த வல்லுநராகத் திகழ்கிறார்.
 ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவனின் உயிலில் எழுதப்பட்டிருந்த 3 பேரில் ஒருவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். மற்ற இருவரும் குடும்ப சூழ்நிலை, வயது உள்ளிட்டவற்றை காரணம் காட்டி இப்பதவியை ஏற்க மறுத்துவிட்டனர். ஆண்டவனின் உயிலை செயல்படுத்த கட்டாயம் உள்ளது. ஆனால், உயிலில் குறிப்பிட்டிருந்த மூவரும் இப்பதவிக்கு வர மறுத்துவிட்டதால், உரிய தகுதிகள் கொண்ட ஆச்சாரியனைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
 இதற்காக கமிட்டி உறுப்பினர்கள், சிஷ்யர்களுடன் ஆலோசனை செய்து ஸ்ரீமன் யாமுனாச்சாரியார் சுவாமிகளை ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளோம். இவரது பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. பதவியேற்ற பின்னர், இவர் ஸ்ரீவராஹ மகாதேசிகன் சுவாமிகள் என அழைக்கப்படுவார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com