காவிரியில் மூழ்கி 6 பேர் சாவு: அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

மணல் கொள்ளைகளால் ஏற்பட்ட பள்ளத்தால்தான் காவிரி ஆற்றில் மூழ்கி 6 மாணவர்கள் இறந்து போனதாக அரசு மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காவிரியில் மூழ்கி 6 பேர் சாவு: அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

மணல் கொள்ளைகளால் ஏற்பட்ட பள்ளத்தால்தான் காவிரி ஆற்றில் மூழ்கி 6 மாணவர்கள் இறந்து போனதாக அரசு மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 காவிரி கரையில் அமைந்துள்ள புனிதத் தலங்களில் ஒன்றான கபிஸ்தலத்தில் சீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் அங்குள்ள முனியாண்டவர் கோயில் படித்துறையில் குளிக்கச் சென்றனர்.
 அப்போது ஏற்பட்ட சுழலில் சிக்கி 7 பேரும் காவிரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் சஞ்சய் என்ற மாணவர் மட்டும் நீந்தி தப்பித்து வந்திருக்கிறார். மணிகண்டன், கதிரவன், சிவபாலன், ஸ்ரீநவீன், விஷ்ணுப்பிரியன், வெங்கடேசன் ஆகிய 6 மாணவர்கள் உயிரிழந்தனர்.
 இந்தத் துயர நிகழ்வை விபத்து என்று கூற முடியாது. காவிரியில் இயல்பான நீரோட்டம் இருந்தால் இத்தகைய நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பே இல்லை.
 மாறாக, கபிஸ்தலம் முனியாண்டவர் கோயில் படித்துறை அருகே அதிகாரப்பூர்வமற்ற வகையில் மணல் குவாரி அமைக்கப்பட்டு, சட்டவிரோத மணல் கொள்ளை நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பல இடங்களில் 10 அடி ஆழத்துக்கும் கூடுதலாக பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனாலும், அதன் காரணமாக ஏற்பட்ட நீர் சுழற்சியிலும் சிக்கியதால்தான் 6 மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.
 சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்து அப்பகுதியில் வாழும் மக்கள் பலமுறை புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளும், ஆளுங்கட்சி நிர்வாகிகளும், தமிழக அரசும்தான் மாணவர்களின் மரணத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
 மேலும் இரு சடலங்கள் மீட்பு: தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் பகுதி காவிரியாற்றில் மூழ்கி உயிரிழந்த மேலும் இருவரின் சடலங்கள் சனிக்கிழமை காலை மீட்கப்பட்டன.
 பாபநாசம் அருகே கபிஸ்தலம் ஊராட்சி, சீத்தாலெட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த பா. சஞ்சய் (14), எஸ். மணிகண்டன் (17), கே. விஷ்ணுவர்தன் (13), டி. வெங்கடேசன் (18), பா. சிவபாலன்(15), கே. நவீன்(14), எஸ். கதிரவன் (17) ஆகிய 7 பேரும் அருகேயுள்ள முனியாண்டவர் கோவில் காவிரிப் படித் துறையில் வெள்ளிக்கிழமை குளித்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மூழ்கினர்.
 இவர்களில் மாணவர் சஞ்சய் தப்பினார். உயிரிழந்த மணிகண்டன், வெங்கடேசன்,விஷ்ணுவர்தன், நவீன் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் சனிக்கிழமை காலை மாணவர்கள் சிவபாலன், கதிரவன் ஆகியோரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
 மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உயிரிழந்த மாணவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் உயிரிழந்தோரின் வீடுகளுக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 இதைத் தொடர்ந்து மாணவர்களின் சடலங்கள் சீத்தாலெட்சுமிபுரம் கிராமம் அருகே செல்லும் காவிரிக் கரையிலுள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com