தாமிரவருணி மஹா புஷ்கரம்: பத்தாவது நாளில் பக்தர்கள் குவிந்தனர்

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின் பத்தாம் நாளான சனிக்கிழமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள படித்துறைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
தாமிரவருணி மஹா புஷ்கரம்: பத்தாவது நாளில் பக்தர்கள் குவிந்தனர்

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின் பத்தாம் நாளான சனிக்கிழமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள படித்துறைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
 குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்துள்ள நிலையில், 144 ஆண்டுகளுக்குப் பின்பு மஹா புஷ்கர விழா தாமிரவருணியில் நிகழாண்டில் கொண்டாடப்படுகிறது. பொதிகை மலை முதல் புன்னக்காயல் வரை 149 கி.மீ. பயணிக்கும் தாமிரவருணி நதியில் மொத்தம் 143 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. அவற்றில் 64 தீர்த்தக்கட்டங்கள் மட்டுமே பக்தர்கள் நீராடும் வகையில் உள்ளன. திருநெல்வேலி அருகே கோடகநல்லூர், மேலச்செவல் (தேசமாணிக்கம்), கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, திருநெல்வேலி கருப்பந்துறை, குறுக்குத்துறை, சி.என்.கிராமம், கைலாசபுரம், வண்ணார்பேட்டை, மணிமூர்த்தீஸ்வரம், அருகன்குளம் (ஜடாயுதீர்த்தம்), நாரணம்மாள்புரம், சீவலப்பேரி தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இவற்றில் சனிக்கிழமை அதிகாலை முதலே பக்தர்கள் நீராடத் தொடங்கினர். புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் மஞ்சளைக் கரைத்து வழிபட்டனர். கைக்குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் தங்களது உறவினர்கள் முன்னிலையில் நமச்சிவாயம், கோவிந்தா முழக்கத்துடன் தங்கள் குழந்தைகளை நீராட்டி மகிழ்ந்தனர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளும் தங்களது சிரமத்தைப் பொருள்
 படுத்தாமல் தாமிரவருணியில் புனித நீராடி இயற்கையையும், இறைவனையும் வேண்டினர். தாமிரவருணியை போற்றும் பாடல்களையும், திருப்பாவை, திருவெம்பாவை, திருவாசக பாடல்களையும் சில பக்தர்கள் பாடி இறைவனை வழிபட்டனர்.
 2 லட்சம் பேர்: ஆந்திர மாநிலம், கடப்பாவைச் சேர்ந்த எம்.சிவண்ணா கூறியது: ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களில் புஷ்கர நாள்களில் புனித நீராடல் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகும். இயற்கை போற்றுதலுக்குரியது என்பதையும், முன்னோர் வழிபாட்டில் உள்ள நன்மையையும் தங்களது வாரிசுகளுக்கு தெரிவிக்க நதிக்கரையில் புஷ்கர விழா பெரிதும் உதவும். எங்களது மாநிலத்தில் உள்ள கோதாவரியில் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜூலை 14 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மஹா புஷ்கர விழா நடைபெற்றது. அப்போது மாநிலம் முழுவதும் பெரிதும் விழிப்புணர்வு ஏற்பட்டது. அதனால் அதற்கு அடுத்ததாக தாமிரவருணி மஹா புஷ்கரம் வந்துள்ளதால் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த விசாகப்பட்டினம், விஜயவாடா, நெல்லூர், கர்னூல், காக்கிநாடா, திருப்பதி, கடப்பா, ராஜமுந்திரி, ஹைதராபாத், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கம்மம், கரீம்நகர், நலகொண்டா, விகராபாத், வாரங்கல், வனபார்த்தி பகுதிகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தாமிரவருணி மஹா புஷ்கரத்தில் பங்கேற்றுள்ளனர்.
 இந்தியாவின் தென்கோடியில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியின் அருகேயுள்ள திருநெல்வேலி, பாபநாசம், குற்றாலம் ஆகிய பகுதிகளில் கூடுதல் வசதிகளை உருவாக்கி தேசிய அளவிலான சுற்றுலா மையங்களாக மாற்ற மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் புஷ்கர நாள்களில் மட்டுமன்றி பிற நாள்களிலும் ஏராளமான ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல உதவியாக இருக்கும் என்றார்.
 மிருத்யுஞ்ஜய ஹோமம்: தாமிரவருணி மஹா புஷ்கர விழா ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எஸ்.மகாலட்சுமி சுப்ரமண்யன் கூறியது: மஹா புஷ்கர விழாவையொட்டி திருநெல்வேலி குறுக்குத்துறையில் தினமும் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி சனிக்கிழமை உலக நன்மைக்காகவும், மக்கள் பிணிகளில் இருந்து விடுபடவும் வேண்டி மிருத்யுஞ்ஜய ஹோமம் நடைபெற்றது. காலையில் மடிப்பாக்கம் ஹரிஹரனின் பஜனையும், மாலையில் விஜயகணேஷ் (வயலின்) மற்றும் உமையாள்புரம் மாலியின் (மிருதங்கம்) இசைநிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலையில் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி முன்னிலையில் தாமிரவருணி நதிக்கரையில் மஹா ஆரத்தி பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (அக். 21) ஆயுஷ் ஹோமம் நடைபெற உள்ளது என்றார் அவர்.
 திருநெல்வேலி சந்திப்பு அருகே கைலாசபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் புருஷ ஸþக்த ஹோமம் சனிக்கிழமை நடைபெற்றது. தைப்பூச மண்டப படித்துறையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. படித்துறையில் காலையில் திருப்பள்ளியெழுச்சி, மங்கள நாகசுர இசை, சங்கல்ப ஸ்நானம் ஆகியவை நடைபெற்றன. அதன்பின்பு சதுர்வேத பாராயணம், ருத்ர ஜபம், ஹோமம் மஹா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. சீவலப்பேரியில் துர்காம்பிகா தேவஸ்தானம் டிரஸ்ட் சார்பில் குபேர மஹாலட்சுமி ஹோமம் சனிக்கிழமை நடைபெற்றது. ஜடாயு தீர்த்தக்கட்டம், வண்ணார்பேட்டை, மணிமூர்த்தீஸ்வரம் பகுதிகளிலும் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
 நெல்லை மாநகரம் ஸ்தம்பித்தது
 தாமிரவருணி மஹா புஷ்கர விழாவுக்காக ஏராளமானோர் திருநெல்வேலிக்கு சனிக்கிழமை வந்ததால் நகரம் முழுவதும் ஸ்தம்பித்தது. திருநெல்வேலி ரயில் நிலையத்தில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
 தாமிரவருணி மஹா புஷ்கர விழா கடந்த 11 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரயில், பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து புனித நீராடி செல்கிறார்கள்.
 ஆயுத பூஜை விடுமுறை என்பதால் சனிக்கிழமை காலையில் திருநெல்வேலியை அடைந்த கன்னியாகுமரி விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், கோவை-நாகர்கோவில் விரைவு ரயில்களில் திருநெல்வேலிக்கு ஏராளமானோர் வந்தனர். ஆந்திரம், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி தமிழகத்தின் பெருநகரங்களான சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் திருநெல்வேலிக்கு வந்தனர். அவர்களுக்கு கூடுதலாக கழிப்பறை வசதிகள் செய்யப்படாததால் பக்தர்கள் தவித்தனர்.
 செயல்படாத கழிப்பறை: இதுகுறித்து ரயில் பயணி ஒருவர் கூறுகையில், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது. 2, 3, 4, 5 ஆவது நடைமேடைகளில் கழிப்பறை வசதிகள் போதாது. தாமிரவருணி மஹா புஷ்கரத்திற்காக ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்று தெரிந்தும் தெற்கு ரயில்வே கூடுதலாக கழிப்பறை வசதிகள் செய்யத் தவறிவிட்டது.
 இதேபோல குலசேகரன்பட்டினம் தசரா விழாவுக்கு சென்ற பக்தர்கள், திருச்செந்தூரில் இருந்து காலை 7.10, 9.15 மணிக்கு புறப்படும் ரயிலில் வந்து திருநெல்வேலியில் இறங்கினர். அவர்களும் கழிப்பறை வசதியின்றி தவித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்காக 2 ஆவது நடைமேடையில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை ரயில்வே துறையினர் பூட்டி வைத்திருந்ததால் பயணிகள் தவித்தனர் என்றார்.
 போக்குவரத்து நெரிசல்: தாமிரவருணி மஹா புஷ்கரத்திற்கு ஏராளமான பக்தர்கள் திருநெல்வேலிக்கு வாகனங்களில் வந்ததால், 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கைலாசபுரத்தில் உள்ள பெருமாள் மேலரத வீதி, கீழரத வீதி, சி.என்.கிராமம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள ரத வீதிகள், தொண்டர் சன்னதி, சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, திருவனந்தபுரம் சாலை, லங்கர்கானா தெரு, மனக்காவலம்பிள்ளை மருத்துவமனை சாலை ஆகியவற்றில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பொருள்காட்சி திடல், மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகம் உள்ளிட்டவற்றில் வாகனங்கள் நிரம்பி வழிந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com