நவீன கருவிகள் மூலம் பெரிய கோயிலில் ஐம்பொன் சிலைகள் ஆய்வு

நவீன கருவிகள் மூலம் பெரிய கோயிலில் ஐம்பொன் சிலைகள் ஆய்வு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள ஐம்பொன் சிலைகளின் தொன்மைத் தன்மை குறித்து தொல்லியல் துறை மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் நவீன கருவிகள் மூலம் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள ஐம்பொன் சிலைகளின் தொன்மைத் தன்மை குறித்து தொல்லியல் துறை மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் நவீன கருவிகள் மூலம் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
 தஞ்சாவூர் பெரிய கோயிலில் 60 ஆண்டுகளுக்கு முன் மாயமான ராஜராஜசோழன் சிலை மற்றும் லோகமாதேவி சிலையை குஜராத்திலிருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மே 29-ஆம் தேதி மீட்டனர்.
 இக்கோயிலில் மேலும் சில சிலைகள் திருடு போயிருப்பதும், சில சிலைகள் தொன்மைத் தன்மையுடன் இல்லை என்றும், புதிதாகச் செய்யப்பட்டு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
 இந்நிலையில், இக்கோயிலில் உள்ள ஐம்பொன் சிலைகளின் தொன்மைத் தன்மை குறித்து செப். 29-ஆம் தேதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு செய்தனர். இதையடுத்து, அக். 11-ஆம் தேதியும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரும், தொல்லியல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர்.
 இதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக இக்கோயிலில் உள்ள ஐம்பொன் சிலைகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. இதற்காக அர்த்த மண்டபத்தில் உள்ள 41 ஐம்பொன் சிலைகள் முருகன் சன்னதி முன் உள்ள ராஜா மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
 இச்சிலைகளின் தொன்மை குறித்து இந்திய தொல்லியல் துறையின் தென்னிந்திய சரக இயக்குநர் எம். நம்பிராஜன் தலைமையில் சுமார் 10 பேர் வேதியியல் தொடர்பான நவீன கருவிகள் மூலமும், உயரம், அகலம் அளவிடும் கருவி மூலமும் சரிபார்த்தனர்.
 இவர்களுடன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் 2 துணைக் கண்காணிப்பாளர்கள், தலா 10 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என ஏறத்தாழ 40 போலீஸாரும் இருந்தனர்.
 இந்த ஆய்வு காலை 9 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3.30 மணி வரை தொடர்ந்தது. பின்னர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தெரிவித்தது:
 இக்கோயிலில் உள்ள சிலைகளின் தொன்மை குறித்து ஏற்கெனவே ஆய்வு செய்தோம். அதில் மீதம் இருந்த பணியை சனிக்கிழமை தொடர்ந்தோம்.
 இந்திய தொல்லியல் துறையின் நிபுணர் குழுவினர் இந்த ஆய்வைச் செய்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் துறையினர் சான்றிதழ் கொடுத்த பின்னர் அடுத்தகட்ட விசாரணை தொடங்கப்படும் என்றார் அவர்.
 பின்னர், இக்குழுவினர் தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று 19 சிலைகளையும் ஆய்வு செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com