யாருக்கும் சலுகை காட்டவில்லை: டெண்டர் ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம்

டெண்டர் ஒதுக்கீடு விவகாரத்தில் யாருக்கும் சலுகை காட்டவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் தெரிவித்துள்ளார்.
யாருக்கும் சலுகை காட்டவில்லை: டெண்டர் ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம்

டெண்டர் ஒதுக்கீடு விவகாரத்தில் யாருக்கும் சலுகை காட்டவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் தெரிவித்துள்ளார்.
 சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலையில் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த முதல்வர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 சிபிஐ விசாரணை?: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பொய்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த ஆட்சியை கலைக்கலாம் என்று ஆயுதத்தை எடுத்தார். அதற்குப் பிறகு, கட்சியை உடைக்கலாம் என்று நினைத்தார். சிலரை தூண்டிவிட்டு எங்கள் கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினையை உருவாக்கப் பார்த்தார். அதுவும் முடியவில்லை.
 ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவிநாசி சாலைப் பணிகளை என் உறவினருக்கு கொடுத்தாகக் குற்றச்சாட்டுகிறார். இதுகுறித்து நான் பலமுறை விளக்கம் அளித்து விட்டேன். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் தவறான செய்தியை நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்.
 டெண்டர் விடுவதில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது. இந்த டெண்டரைப் பொருத்தவரைக்கும் ஆன்லைன் டெண்டர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தகுதியானவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இதில் எப்படி முறைகேடு நடக்க முடியும்?
 திமுக ஆட்சியில் 2010-இல் ராமலிங்கம் அண்ட் கோ நிறுவனத்துக்கு குடிசை மாற்று வாரியத்தில் ரூ. 74 கோடிக்கு டெண்டர் அளித்தனர். அதுமட்டுமல்லாமல், திமுக ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு 10 டெண்டர் அளித்துள்ளனர். ஆக, இவருக்குத் தகுதியில்லை என்று சொல்ல வழியே கிடையாது. விலைப்புள்ளி அதிகமாக கொடுத்ததாக சொல்கிறார்கள். ஆர்.எஸ்.பாரதி, ஒரு கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு ரூ.2 கோடியே 20 லட்சம்தான் ஆகும் என்று சொல்கிறார். திமுக சார்பில் மத்தியில் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்தபோது, 2006-இல் சேலம் - குமாரபாளையம் இடையே ஒரு கி. மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைப்பதற்கு ரூ.8 கோடியே 78 லட்சத்துக்கு டெண்டர் விட்டிருக்கிறார்கள். இதேபோன்று பல்வேறு சாலைகள் ஒரு கி.மீ. அமைக்க குறைந்தபட்சம் ரூ.7.52 கோடியில் இருந்து அதிகபட்சம் ரூ.12.42 கோடி வரை இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஏலம் விடப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இப்போது கிட்டத்தட்ட 50 சதவீதம் விலைவாசி உயர்ந்திருக்கிறது. ஆனால் ஒரு கி. மீ. சாலையை ரூ.2.20 கோடி மதிப்பில் அமைக்கலாம் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். மேலும் தற்போது தமிழகத்தில் இந்திய நெடுஞ்சாலைத் துறை அமைக்கும் சாலைகளுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு குறைந்தபட்சம் ரூ.11.22 கோடியில் இருந்து அதிகபட்சம் ரூ.25.78 கோடி வரை ஏலம் விடப்பட்டிருக்கிறது.
 இதில் விலைவாசிக்கு ஏற்ப தொகையை உயர்த்திக் கொள்ளலாம் என விதிமுறையும் உள்ளது. 10 ஆண்டு காலம் சம்பந்தப்பட்ட நிறுவனமே பராமரிப்புப் பணியும் மேற்கொள்ள வேண்டும். இதில் முதல் இரண்டாண்டு காலம் சாலை அமைக்கிற பணி, மீதி எட்டு ஆண்டுகள், சாலை அமைத்தபிறகு அந்த நிறுவனமே அதன் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். ஒரு கிலோமீட்டருக்கு ரூ.10.16 கோடிக்கு ஏலம் விட்டிருக்கிறோம். டெண்டர் விட்டு இப்போது ஓராண்டாகி விட்டது. இன்னும் வேலையே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் ஊழல் என்கிறார்கள்.
 இந்த அரசு யாருக்கும் சலுகை காட்டவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்குமேல் அவர் சொல்லிக் கொண்டிருந்தால் எதிர்க்கட்சி வரிசையில் அவர் அமர்வதற்கு லாயக்கில்லை.
 சிபிஐ ஆரம்ப கட்ட விசாரணை என்று தான் சொல்லியிருக்கிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு, அவதூறு செய்தியைப் பரப்பிக் கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.
 திமுக ஆட்சிக் காலத்தில் 2006 முதல் 2008-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு சாலை அமைக்கும் பணிகளில் ஏலத் தொகையை விட பல மடங்கு கூடுதலாகச் செலவு செய்துள்ளனர்.
 ஆற்காடு - உளுந்தூர்பேட்டை - போளூர் - செங்கம் - விருத்தாசலம் - திருவாரூர் - ஜெயங்கொண்டம் - அரியலூர் மற்றும் புதிய புறவழிச் சாலை, சிதம்பரம் - சீர்காழி - ஆரணி - போளூர் - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் - விருத்தாசலம் - அரியலூர் மற்றும் திருவாரூர் சாலைகளை மேம்படுத்த டெண்டர் ஒப்பந்தம் விட்ட மதிப்பு ரூ. 611.70 கோடி. இதற்கு ரூ.161.67 கோடி அதிகமாக அளிக்கிறார்கள்.
 திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தோண்ட தோண்ட வந்து கொண்டேயிருக்கின்றன.
 தற்போது ஆன்லைன் டெண்டர் விடப்பட்டுள்ளது. பணம் கட்டுவது கூட யாருக்கும் தெரியாது. பாஸ்வேர்டை என்றைக்கு திறக்கிறார்களோ, அன்றைக்குத்தான் யார் டெண்டர் அளித்துள்ளார்கள், என்ன விலையில் அளித்துள்ளார்கள் என்பது முழுவதுமாகத் தெரியும். அதில் எப்படி முறைகேடு நடக்கும்?.
 திமுக ஆட்சியின் முறைகேடுகள் குறித்து சட்ட வல்லுநர்களோடு கலந்து ஆலோசித்துத் தான் சொல்ல முடியும்.
 சபரிமலைக்கு பெண்கள் செல்வது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்யவோ, கருத்துச் சொல்லவோ எதுவுமில்லை.
 சபரிமலை தொடர்பாக தமிழ்நாட்டில் எந்தவொரு சம்பவமும் நடைபெறவில்லை. சம்பவங்கள் நடைபெறுவதற்கு எவ்வித வாய்ப்பும் கொடுக்காத அளவுக்கு காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்றார்.
 சர்க்கஸ் காட்டுவதற்கு திறமை வேண்டும்
 சர்க்கஸ் என்பது சாதாரண விஷயமில்லை. யாரும் போய் விளையாட முடியாது. உள்ளே போய் திறமையைக் காட்ட வேண்டும். அந்த வகையில் நான் என்னுடைய திறமையை வெளிக்காட்டி, மக்களுடைய நன்மதிப்பை பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தார்.
 சேலம் மாவட்டம், ஓமலூரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் மேலும் கூறியதாவது: தி.மு.க. வை கம்பெனி என்று விமர்சனம் செய்ததற்காக, அ.தி.மு.க.வை சர்க்கஸ் கூடாரம் என்று மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இதன் மூலம் திமுகவை அவர் கம்பெனி என்று ஒப்புக் கொண்டுள்ளார். நாங்கள் சொன்னது சரி என்று ஒப்புக் கொண்டதற்காக அவருக்கு நன்றி. என்னை சர்க்கஸ் கோமாளி என்றும், ரிங் மாஸ்டர் தில்லியில் இருக்கிறார் என்றும் ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார்.
 சர்க்கஸ் என்பது சாதாரண விஷயமில்லை. யாரும் போய் விளையாட முடியாது. திறமை இருந்தால் தான் அதையும் செய்ய முடியும். எங்களுக்கு ஆட்சி செய்கின்ற திறமை இருக்கின்ற காரணத்தினாலே நிறைய திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கி, இன்றைக்கு நல்ல பெயர் எடுத்துக் கொண்டு வருகிறோம். ஆகவே, அவர் என்ன சொன்னாலும், அதைப் பற்றி கவலை இல்லை. எங்களைப் பொருத்தவரை மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருப்போம் என்றார் முதல்வர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com