ஆன்லைன் டெண்டரில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்கத் தயார்: துரைமுருகன்

ஆன்லைனில் டெண்டர் விடப்படுவதால் முறைகேடு, ஊழல் நடைபெற வாய்ப்பில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி
மன்னார்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் திமுக பொருளாளர் துரைமுருகன். 
மன்னார்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் திமுக பொருளாளர் துரைமுருகன். 


ஆன்லைனில் டெண்டர் விடப்படுவதால் முறைகேடு, ஊழல் நடைபெற வாய்ப்பில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது ஏற்புடையதாக இல்லை. இதில் எவ்வாறு முறைகேடு நடைபெறுகிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். 
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் திமுக முன்னாள் அமைச்சர் மன்னை ப. நாராயணசாமியின் 99 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பந்தலடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
திராவிட இயக்கம் என்பது கட்சி மட்டுமல்ல. இது ஒடுக்கப்பட்ட மக்களிடம் சுயமரியாதையையும், அரசியல் தெளிவையும் ஊட்டத் தொடங்கப்பட்ட அமைப்பாகும். இதற்கு வித்திட்டவர்கள் சி. நடேசனார், தியாகராயர், டி.என். நாயர் ஆகியோர்.
திராவிட இயக்கம் அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் தொடங்கப்படவில்லை. 
சுயமரியாதையுடன் வாழ வேண்டும், அரசியலில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டதாகும். 
திமுக சார்பில் முதல்முதலாக பெரியார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் மன்னை ப. நாராயணசாமி ஆவார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மக்கள் நலத் திட்டங்கள் எதையாவது அறிவித்து நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளார்களா? காவிரி பிரச்னைக்காக 36 முறை கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் கருணாநிதி. 
திமுக ஆட்சிக்காலத்தில்தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இடைக்காலத் தீர்ப்பு பெறப்பட்டது.
ஜெர்மன் நாட்டின் ரூ.2,500 கோடி நிதியுதவியுடன் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதற்கு 2017-இல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில், 5 பேர் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளனர். 2018-ஆம் ஆண்டு முடியும் தருவாயில் உள்ளது. 
ஏன் அந்த ஒப்பந்தப்புள்ளியை இத்தனை காலமாக திறக்கவில்லை என சட்டப் பேரவையிலும், பொதுக்கூட்டத்திலும் தொடர்ந்து பேசி வருகிறேன், ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து வெளிப்படையான, தெளிவான பதில் இதுநாள்வரை வரவில்லை. இதுவரை 48 நாடுகளில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. தமிழகம் மட்டும் புரியாத புதிராகவே உள்ளது.
தமிழகத்தில் சாலைப் பணிக்கான டெண்டர் விடுவதில், ஆன்லைன் முறை பின்பற்றப்பட்டு வருவதால், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களும் இதில் பங்கேற்கலாம்; இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பே இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி முறையிலேயே அரசின் சட்டத் திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் மீறப்பட்டுள்ளன. 
இதுவரை வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் யாராவது ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனரா? ஆன்லைன் முறையில் ஊழல், முறைகேடு நடைபெறும் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க நான் 
தயாராக உள்ளேன் என்றார் துரைமுருகன்.
கூட்டத்துக்கு திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் த. சோழராஜன் தலைமை வகித்தார். 
திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர். பாலு, மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன், எம்எல்ஏக்கள் உ. மதிவாணன், டி.ஆர்.பி. ராஜா, மாநில விவசாய அணி செயலர் ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் எம்எல்ஏ பி. ராஜமாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி. பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com