கோயில் கடைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை உடனடியாக வெளியேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்துசமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோயில் கடைகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது கருணை காட்டாமல் அவர்களை உடனடியாக
கோயில் கடைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை உடனடியாக வெளியேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு


இந்துசமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோயில் கடைகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது கருணை காட்டாமல் அவர்களை உடனடியாக வெளியேற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.கல்யாணசுந்தரம் தாக்கல் செய்த மனு: 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சம்பந்தம் இல்லாத அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் வசூலிக்கத் தடை விதித்தும், கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கவும், கோயிலில் அறநிலையத்துறை ஊழியர்கள் வருகைப்பதிவுக்கு பயோமெட்ரிக் பதிவு கருவியை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோயில்களில் அந்தந்த மாவட்ட நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை காணொலிக் காட்சி மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எம்.வி.முரளிதரனும், மதுரை கிளையில் நீதிபதி டி.கிருஷ்ணவள்ளியும் திங்கள்கிழமை விசாரித்துப் பிறப்பித்த உத்தரவு:
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கீழ்க்கண்ட உத்தரவுகளை ஒவ்வொரு கோயிலின் நிர்வாக அலுவலரும் பின்பற்ற வலியுறுத்த வேண்டும். ஒவ்வொரு கோயிலிலும் அங்கீகரிக்கப்பட்ட பூசாரிகளைக் கொண்டு தான் பூஜைகளை நடத்த வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது. கோயில் ஊழியர்கள், பூசாரிகள் வருகையைக் கணக்கிட பயோமெட்ரிக் முறையைப் பின்பற்ற வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கூடுதல் காணிக்கை வசூலிக்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்வது அவசியம். கோயில்களில் இலவச தரிசன வரிசைகளின் நீளத்தை குறைக்கக் கூடாது, பணத்தின் அடிப்படையில் பக்தர்களை ஏழை, பணக்காரர் என பிரிக்கும் நிலை மாற வேண்டும். தரிசனத்தின்போது முக்கியஸ்தர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைகள் எதிர்காலத்தில் தவிர்க்கப்படுவது அவசியம்.
அனைத்துக் கோயில்களிலும் சுகாதாரம் பின்பற்றப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள் அனைத்துக் கோயில்களிலும் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். கோயில் வளாகம் முழுவதிலும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தடை செய்யப்பட வேண்டும். கோயில் வளாகத்தில் பசுமையைப் பாதுகாக்கும் வகையில் புதிய மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். கோயிலின் கலை, கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தேவையான காலங்களில் கோயில் சிற்பங்கள் உள்ளிட்டவை முறையாகப் பராமரிக்கப்படுவது அவசியம். பிரசாதம் வழங்கும் மையங்களில் விலைப்பட்டியல் இருக்க வேண்டும். பல்வேறு கோயில்களில் பராமரிப்புப் பணிகளுக்காக போதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
எனவே, இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது ஒவ்வொரு கோயிலிலும் உள்ள காலியிடங்கள் தொடர்பான விவரங்களை மாவட்ட அளவில் தாக்கல் செய்ய வேண்டும்.
தற்போது கோயில் சிலைகள் மாயமாகும் சம்பவங்கள் கோயில் சொத்துகள் கண்காணிக்கப்படுவதன் தீவிரத்தை உணர்த்துகின்றன. எனவே ஒவ்வொரு கோயில்களிலும் எந்தெந்தப் பகுதியில் எல்லாம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்பது குறித்த அறிக்கையும், கோயில்களுக்கென மாநில அளவில் கண்காணிப்பு அறை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்துசமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஆறு மாதத்துக்குள் ஒவ்வொரு கோயிலின் அலுவலக அறிவிப்பு பலகைகளிலும் கோயில் சொத்துகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். கோயில் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடந்து வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இப்பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். கோயில் சொத்துகள், நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களைக் கண்டுபிடித்து சொத்துகளை உடனடியாக அவர்களிடம் இருந்து மீட்க வேண்டும். தனி நபர் வளர்ச்சிக்கு கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதை ஏற்க முடியாது. கோயில் கடைகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளவர்களை எவ்வித கருணையும் காட்டாமல்
வெளியேற்ற வேண்டும். கோயில் சொத்துகளை அபகரிக்க முயல்பவர்கள் மீதும், அதற்கு துணைபுரியும் அதிகாரிகள் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கலாம்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின்போது கன்னியாகுமரி மாவட்டம், பகவதியம்மன் கோயில், பழனி சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அசையா சொத்துகளின் விவரங்கள், அதன் தற்போதைய நிலை குறித்த விவரங்களை கோயில் நிர்வாக அலுவலர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். 
இதுதொடர்பாக இடைக்கால அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் 2019 ஜனவரி 22 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். 
மாவட்ட நீதிபதிகள் தங்களது அடுத்தகட்ட ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com