டெங்கு காய்ச்சலால் இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு

சென்னை கொளத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது நிரம்பிய இரட்டை குழந்தைகள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு வார்டில் கொசு வலைக்குள் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு வார்டில் கொசு வலைக்குள் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


சென்னை கொளத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது நிரம்பிய இரட்டை குழந்தைகள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு இந்த மாதம் (அக்டோபர்) மட்டும் மேலே குறிப்பிட்ட இரட்டை குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு அக்டோபர் மாதத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை கொளத்தூர் மேற்கு தணிகாசலம் தெருவைச் சேர்ந்த இரட்டை குழந்தைகள் தீக்ஷா (6), தக்ஷண் (6) ஆகியோருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பெற்று வந்தனர். காய்ச்சல் அதிகரித்ததைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் இருவரையும் பெற்றோர் சனிக்கிழமை சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை நள்ளிரவில் தீக்ஷா இறந்தார்; சிறிது நேரத்தில் தக்ஷணும் இறந்தார்.
டெங்கு உறுதி செய்யப்பட்டது: இரட்டை குழந்தைகளின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் டெங்கு வைரஸ் காய்ச்சலால் குழந்தைகளுக்கு உயிரிழப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது என்று எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
காய்ச்சல்-அலட்சியம் வேண்டாம்: இது குறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
குழந்தைகள் உள்பட யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியம் வேண்டாம். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், 1 சதவீதம் பேருக்கு மட்டுமே உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய தீவிர டெங்கு பாதிப்பு ஏற்படும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், ஏனையோர் மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற்றால் முழுமையாகக் குணம் அடைந்து விடலாம். இதே போன்று பன்றிக் காய்ச்சல் ஏற்படும் நிலையில் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றால் முழுமையாகக் குணம் அடைந்து விடலாம்.
நாளொன்றுக்கு 25 முதல் 50 பேர்...: தமிழகம் முழுவதும் தினமும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், 25 முதல் 50 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இதே போன்று தினமும் 5 முதல் 20 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். 
கட்டுமான உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்: கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை முறையாகப் பராமரிக்காத 1,000 கட்டுமான உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத் துறை 
இயக்குநர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெங்கு கொசு பெருக்கம்: டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடீஸ் எஜிப்டை கொசுக்கள், தேங்கிய மழை நீரில் உற்பத்தியாகின்றன. எனவே குடியிருப்பு நலச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மூலம் தங்களது குடியிருப்புகளைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் ஜெ.ராதாகிருஷ்ணன்.
கொரட்டூர், மாதவரம்....சென்னையில் மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், கொரட்டூர், மாதவரம் ஆகிய இடங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கொளத்தூரில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பை தொடர்ந்து கொசு ஒழிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தீக்ஷா, தக்ஷண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com