நதிநீர் பிரச்னையைத் தீர்ப்பது குறித்த புதிய மசோதா: தமிழகம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்

நதிநீர் பிரச்னையைத் தீர்ப்பது குறித்த புதிய மசோதா தொடர்பாக தமிழகம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
நதிநீர் பிரச்னையைத் தீர்ப்பது குறித்த புதிய மசோதா: தமிழகம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்


நதிநீர் பிரச்னையைத் தீர்ப்பது குறித்த புதிய மசோதா தொடர்பாக தமிழகம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக அவர் சேலத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தப்படவில்லை. பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்பதால், இடைத்தேர்தலையும், உள்ளாட்சித் தேர்தலையும் கண்டு மாநில அரசு அஞ்சுகிறது. 
இதனால் உள்ளாட்சி அமைப்புகள் வரலாறு காணாத அளவில் ஊழல் நடைபெறும் இடமாக உள்ளன. பொதுமக்களின் கருத்துக் கேட்காமல், முன்னறிவிப்பு இல்லாமல் சொத்து வரி கடுமையாக உயர்த்தப்பட்டதால், நகரப் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் வாடகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 
கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுக 90 சதவீதம் வெற்றிபெற்றதாகக் கூறுகின்றனர். 
விளம்பர பேனர்கள் வைப்பதற்கு அனுமதி பெற்று கட்டணம் செலுத்தித் தான் வைக்க வேண்டும். ஆனால், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளி, அனுமதியில்லாமல் விளம்பர பேனர்கள் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றனர். கிராம நிர்வாகம் தொடங்கி தலைமைச் செயலகம் வரை அனைத்து நிலைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதற்கான சாட்சி, முதல்வர் மீதான சிபிஐ வழக்கு ஆகும். இந்த குற்றச்சாட்டுக்காக முதல்வர் பதவியில் இருந்து விலகி, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். 
நாட்டில் உள்ள நதிகளின் பிரச்னையைத் தீர்க்க புதிய மசோதாவை தாக்கல் செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது, ஏற்கெனவே தீர்க்கப்பட்ட காவிரி பிரச்னையை மீண்டும் வழக்குக்கு இழுத்துச் செல்லும் முயற்சியாகும். மேலும், இந்தப் பிரச்னையில் மாநில அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இந்த மசோதா நாடாளுமன்றத்துக்கு வரும்போது, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்துப் பேச வேண்டும். 
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாகத் தெரிவித்தார். ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறும் அரசு, அதனை நிறைவேற்றாமல் நிதிப் பற்றாக்குறை என்று முதல்வர் கூறுவது ஏற்புடையது அல்ல. அரசு ஊழியர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார் மீதான பாலியல் குற்றச்சாட்டுப் புகாரில் அவர் பதவி விலகி, முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் வழக்கின் தீர்ப்பை விரைவாக அறிவிக்க வேண்டும். நாட்டில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வருமான வரித் துறை போன்ற பல்வேறு துறைகள் சுதந்திரமாகச் செயல்படுகிறது என்று உறுதியாக கூறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீ டூ குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். கேரளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த முடியாததால், சாமியின் பெயரால் ஆட்சியைப் பலவீனப்படுத்த ஆர்.எஸ்.எஸ், பாஜக முயற்சிக்கிறது என்றார்.
இந்தப் பேட்டியின்போது, மாவட்டச் செயலாளர் மோகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com