சமணர் கோயிலில் திருடு போன ஐம்பொன் சிலைகள் மீட்பு: 5 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பழைமையான சமணர் கோயிலில் திருடு போன ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் உள்பட 8 சிலைகளை போலீஸார் மீட்டனர்.
செஞ்சி அருகே சமணர் கோயிலில் திருடப்பட்டு மீட்கப்பட்ட சிலைகளைக் காட்டி பேட்டியளிக்கும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார். உடன் சிலைகளை மீட்ட போலீஸார்.
செஞ்சி அருகே சமணர் கோயிலில் திருடப்பட்டு மீட்கப்பட்ட சிலைகளைக் காட்டி பேட்டியளிக்கும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார். உடன் சிலைகளை மீட்ட போலீஸார்.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பழைமையான சமணர் கோயிலில் திருடு போன ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் உள்பட 8 சிலைகளை போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக 5 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
செஞ்சி அருகேயுள்ள பெரும்புகை கிராமத்தில் கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீமல்லிநாதர் என்ற சமணர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த மாதம் 16-ஆம் தேதி மர்ம நபர்கள் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் உள்பட 8 சிலைகளைத் திருடிச் சென்றனர்.
செஞ்சி டிஎஸ்பி ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளர் அசோகன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, செஞ்சி அருகே அத்தியூர் காப்புக் காட்டில் இருந்து மல்லிநாதர், பாவை விளக்கு உள்ளிட்ட 4 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை வெண்கலச் சிலைகள் என தெரிந்து மர்ம நபர்கள் வீசிச் சென்றது தெரிய வந்தது.
இந்த நிலையில், திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவரான செஞ்சி அருகே உள்ள சிட்டாம்பூண்டியைச் சேர்ந்த சுரேஷ் போலீஸாரிடம் அண்மையில் பிடிபட்டார். மேலும், நான்கு சிலைகள் அத்தியூர் வனப் பகுதி ஓடை அருகே புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் அளித்த தகவலின் பேரில், போலீஸார் அந்த 4 ஐம்பொன் சிலைகளையும் செவ்வாய்க்கிழமை மீட்டனர். இதுதொடர்பாக, 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் கூறியதாவது:
செஞ்சி பெரும்புகை மல்லிநாதர் சமணர் கோயிலில் சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அண்மையில் வனப் பகுதியில் வீசப்பட்ட 4 சிலைகள் மீட்கப்பட்டன.
இதுதொடர்பாக, செஞ்சியைச் சேர்ந்த மேகநாதன், சிட்டாம்பூண்டி சுரேஷ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மல்லிநாதர், தரணேந்திரர், பத்மாவதி, ஜோலாமாலினி ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன.
இதுகுறித்து செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து, பொற்கொல்லரான பாபு மகன் மேகநாதன்(35), சிட்டாம்பூண்டியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சுரேஷ் (35), மேல்களவாய் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சந்தானகிருஷ்ணன் (32), சிட்டாம்பூண்டியைச் சேர்ந்த முனுசாமி மகன் ராஜசேகர் (27), இஸ்மாயில் மகன் அலிபாஷா என்கிற சௌகத் அலி (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்களுக்கு வேறு சிலைத் திருட்டு வழக்குகளில் தொடர்புள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் எஸ்.பி.
பெரும்புகை மல்லிநாதர் சமணர் கோயிலில் சுமார் 100 சிலைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 8 சிலைகளை திருடிச் சென்ற திருட்டுக் கும்பலை கைது செய்து, சிலைகளை மீட்ட போலீஸாரை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com