தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தீபாவளி அன்றும், இதர விழாக்காலங்களிலும்
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தீபாவளி அன்றும், இதர விழாக்காலங்களிலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு, நாடு முழுவதும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், அதை விற்பனை செய்யவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை அளித்தனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அனுமதி: அனுமதிக்கப்பட்ட ஒலி மற்றும் புகை வரம்புகளுக்குள் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் மட்டுமே நாடு முழுவதும் விற்கப்பட வேண்டும். மேலும், அத்தகைய பட்டாசுகள் குறைந்த மாசுபாட்டை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளாக இருக்க வேண்டும். 
பட்டாசுகளின் தகுந்த ஒலி மற்றும் புகை வரம்புகளை, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்யும். தீபாவளி பண்டிகையின்போது, அனுமதிக்கப்பட்ட ரசாயனங்களுடன் கூடிய பட்டாசுகள் கொள்முதல், இருப்பு வைத்தல், விற்பனை உள்ளிட்டவை குறித்தும் அந்த அமைப்பே முடிவு செய்யும். மேலும், பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட ரசாயனம் இருக்கிறதா என்பதையும் அந்த அமைப்பு பரிசோதிக்கும்.
அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுடன் கூடிய பட்டாசுகள் சந்தையில் விற்கப்படுவது உறுதிப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதை நீதிமன்றம் ஏற்கிறது. சரவெடி பட்டாசுகள், காற்று, ஒலி, திடக்கழிவு பிரச்னை ஆகியவற்றுக்கு வித்திடுகிறது. எனவே, அவற்றின் தயாரிப்புக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. 
மேலும், பட்டாசு ஆலைகளில் பேரியம் உப்பு பயன்படுத்தப்படுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
மின் வர்த்தக நிறுவனங்களுக்கு தடை: தடை செய்யப்பட்ட பட்டாசுகள் குறிப்பிட்ட பகுதியில் விற்காமலிருப்பதை, அந்தந்த பகுதி காவல் நிலைய ஆய்வாளர் உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் விதிமீறல்களுக்கு ஆய்வாளர்களே பொறுப்பாவர்.
மின் வர்த்தக நிறுவனங்களான ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்றவை அனுமதிக்கப்பட்ட ஒலி வரம்புக்கு அதிகமாக உள்ள பட்டாசுகளை விற்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடையை மீறும் பட்சத்தில், அந்த நிறுவனங்கள் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும். 
பட்டாசுகளின் தீமை விளைவுகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றின் மூலம் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
2 மணி நேரம் அனுமதி: தீபாவளி மற்றும் மற்ற விழாக்காலங்களில், நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகியவற்றின் போது நள்ளிரவு 11.55 மணியிலிருந்து 12.30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
தீபாவளிக்கு 7 நாள்கள் முன்பும், 7 நாள்களுக்குப் பின்னரும் காற்றில் அலுமினியம், பேரியம், இரும்பு ஆகியவற்றின் அளவை அறிந்து கொள்ளும் வகையில், அந்தந்த நகரங்களில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், மாசுக்கட்டுப்பாட்டு குழுக்கள் ஆகியவை குறுகியகால கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
தில்லியில், மக்கள் குழுவாக சேர்ந்து பட்டாசு வெடிப்பதை ஊக்குவிக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், இதனை மற்ற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆராய வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விற்பனை சரியும் அபாயம்: இந்தத் தீர்ப்பு குறித்து, அனைத்து இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பிரவீன் கண்டேல்வால் கூறுகையில், ஆண்டு முழுவதும், ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி மதிப்பில் பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில், பட்டாசு உற்பத்தி, விற்பனை ஆகியவற்றில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு, பட்டாசு உற்பத்தியாளர்களையும், இத்தொழில் சார்ந்து வாழும் பணியாளர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும், பட்டாசு வெடிக்கும் நேரத்திலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், விற்பனை சரியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது  என்று தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும், சுகாதார அலுவலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், அனைத்து விதமான விழாக்களிலும் பட்டாசு நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், மக்களின் உடல்நிலைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், பட்டாசு மீதான பல்வேறு கட்டுப்பாடுகளால், சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் உடல்நலம் பாதிப்படைவது பெருமளவில் குறையும் என்று தெரிவித்தனர்.


விசாரணை விவரங்கள்: முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீது விசாரணை நடைபெற்றபோது, பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில், காற்று மாசுபாட்டுக்கு பட்டாசுகள் மட்டுமே காரணம் அல்ல. காற்று, வெப்பநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காற்று மாசுபாட்டுக்குக் காரணமாக உள்ளன. எனவே, பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்கக் கூடாது. கடுமையான நடைமுறைகளுடன் பட்டாசை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு இருக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை, நாட்டு மக்கள் 130 கோடி பேரின் ஆரோக்கியம் தொடர்பான உரிமை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தாங்கள் கவனத்தில் எடுத்து கொண்டு, இரு தரப்பினருக்கும் சமச்சீரான முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com