பதவி, பணத்தை விரும்பினால் விலகி விடுங்கள்: ரசிகர்களுக்கு ரஜினி அறிவுறுத்தல்

பதவி, பணத்தை விரும்பினால் விலகி விடுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர்ரஜினிகாந்த் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
பதவி, பணத்தை விரும்பினால் விலகி விடுங்கள்: ரசிகர்களுக்கு ரஜினி அறிவுறுத்தல்


பதவி, பணத்தை விரும்பினால் விலகி விடுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர்ரஜினிகாந்த் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்ற தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் திங்கள்கிழமை திடீர் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:
மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எனது (ரஜினி) அனுமதியில்லாமல் நடந்ததாக சிலர் பொய்ப் பிரசாரம் செய்து வருவது எனது கவனத்துக்கு வந்தது. அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மன்ற உறுப்பினர்கள் நியமனம், மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே எனது பார்வைக்குக் கொண்டுவரப்பட்டு, எனது ஒப்புதலுடன்தான் அறிவிக்கப்படுகின்றன.
நான் கூறியது வெறும் பேச்சு அல்ல: கடந்த ஆண்டு மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின்போதே, நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்துப் பதவி வாங்கவேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன், அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகி விடுங்கள் என்று தெளிவாகக் கூறியிருந்தேன். நான் சொன்னது வெறும் பேச்சுக்காக இல்லை. தமிழகத்தில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அரசியலுக்கு வருகிறோம். அப்படி இல்லாமல், மற்றவர்களைப்போல அரசியல் செய்வதற்காக நான் எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்?
எண்ணங்கள் சரியானதாக இருந்தால்தான்...நாம் எதற்காக, எந்த எண்ணத்துடன் அரசியலுக்கு வருகிறோம் என்பது மிக மிக முக்கியம். ஒருவருடைய எண்ணங்கள் சரியானதாக இருந்தால்தான் அவரது செயல்பாடுகள் சரியாக இருக்கும். எனவே, தவறான எண்ணம் உள்ளவர்களிடம் இருந்து நம்மை நாம் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
குடும்பம்தான் முக்கியம்: நான் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயத்தை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். முதலில் நீங்கள் உங்கள் தாய், தந்தை மற்றும் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகுதான் மற்றவை எல்லாம். தன் குடும்பத்தைப் பராமரிக்காமல் மன்றப் பணிக்காக யாரும் வரவேண்டாம். மன்றத்துக்காக யாரையும் செலவு செய்யவேண்டும் என்று நான் சொன்னது கிடையாது.
நான் மன்றத்தினருக்குக் கொடுத்த வேலை, பணம் செலவு செய்து முடிக்க வேண்டிய வேலையும் கிடையாது. அதனால், யாராவது என்னிடம் வந்து நான் மன்றத்துக்காக பணம் செலவு செய்தேன் என்று சொன்னால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்கள் ஆதரவின்றி...: வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம். மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியாது.
நீக்கத்துக்குக் காரணம் என்ன? கடந்த 30, 40 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது. சமூக நலனுக்காக நம்முடன் சேர்ந்து செயல்பட விரும்பும் பொது மக்களுக்கு பொறுப்புகளை வழங்கி நாம் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அப்படி பொதுமக்களுடன் மன்ற நிர்வாகப் பொறுப்புகளை பகிர்ந்து செயல்படாமல் கொடுத்த வேலையை தானும் செய்யாமல், துடிப்புடன் செயல்பட விரும்பும் உறுப்பினர்களை செயல்பட விடாமலும் தடுத்து மன்றத்தின் கொள்கைக்கு முரணாகச் செயல்பட்டவர்களைத்தான் மன்றத்திலிருந்து நீக்கி இருக்கிறோம்.
நம்முடைய கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை. ரசிகர் மன்றத்தை விடுத்து மக்கள் மன்றத்தை நான் உருவாக்கியதன் நோக்கத்தை இவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. 
உண்மையாக உழைப்போரின்...: ஊடகங்கள் மூலம் நம்மைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி வருபவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல்களில் நாம் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. வீண் வதந்திகளில் நாம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. மன்றத்துக்காக உண்மையாக உழைக்கும் எல்லோருடைய செயல்பாடுகளையும் நான் நன்கு அறிவேன். அந்த உழைப்பு வீண் போகாது. அதற்கான பலனை இறைவன் நமக்கும், நம் நாட்டு மக்களுக்கும் தருவான் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com