மஹா புஷ்கரம் நிறைவு: தாமிரவருணியில் 70 லட்சம் பேர் புனித நீராடல்

தாமிரவருணி மஹா புஷ்கர விழா செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணியில் கடந்த 13 நாள்களில் 70 லட்சத்துக்கும்
திருநெல்வேலி குறுக்குத்துறையில் தாமிரவருணி அன்னைக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீபாராதனை.
திருநெல்வேலி குறுக்குத்துறையில் தாமிரவருணி அன்னைக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீபாராதனை.


தாமிரவருணி மஹா புஷ்கர விழா செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணியில் கடந்த 13 நாள்களில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
நவகைலாயத்தில் கூட்டம்: புஷ்கர விழாவின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமையும் பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், முக்கூடல், கோடகநல்லூர், கைலாசபுரம், வண்ணார்பேட்டை, அருகன்குளம் (ஜடாயுதீர்த்தம்), சீவலப்பேரி, முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல் உள்ளிட்ட தீர்த்தக்கட்டங்களில் கூட்டம் அதிகமிருந்தது. 
திருநெல்வேலி குறுக்குத்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரவருணியில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இறுதிநாளில் ஏராளமாக குவிந்தனர்.
நவகைலாய கோயில்களான பாபநாசர்-உலகம்மை கோயில், சேரன்மகாதேவி கைலாசநாதர்-ஆவுடையம்பிகை கோயில், கோடகநல்லூர் கோதபரமேசுவரர்-சிவகாமி அம்பாள் கோயில், சங்காணி கைலாசநாதர்-சிவகாமி அம்பாள் கோயில், முறப்பநாடு கைலாசநாதர்-சிவகாமி அம்பாள் கோயில், ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர்-சிவகாமி அம்பாள் கோயில், தென்திருப்பேரை கைலாசநாதர்- செளந்தர்யநாயகி அம்பாள் கோயில், சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர்-சிவகாமி அம்பாள் கோயில்களின் அருகே தாமிரவருணியில் நீராடிய பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். 
இதேபோல் இரட்டைத்திருப்பதி கோயில்களிலும் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
கொடியிறக்கம்: தாமிரவருணி மஹா புஷ்கர விழா ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருநெல்வேலி குறுக்குத்துறையில் 12 நாள்களும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலையில் தாமிரவருணி அன்னைக்கு தீர்த்தவாரியும், சிறப்பு அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் கொடியிறக்கம் நடைபெற்றது.
70 லட்சம் பேர்: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 13 நாள்களில் மொத்தம் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தாமிரவருணியில் புனித நீராடியதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 
வைகாசிதோறும் தாமிரவருணி திருவிழா: அகில பாரதிய துறவியர்கள் சங்கச் செயலர் சுவாமி ராமானந்தா கூறியது: 
எங்களது அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் காவிரிக் கரையோர பகுதிகளில் விழிப்புணர்வு ரத யாத்திரை நடத்தி வருகிறோம். தாமிரவருணி மஹா புஷ்கரம் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த நதி பிறந்த மாதமாக கருதப்படும் வைகாசி மாதந்தோறும் தாமிரவருணி திருவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com