தமிழகத்தில் வன விலங்கு மரபணு சோதனை மையம் அமையுமா?

தமிழக வனங்களில் சட்ட விரோதமாக நடக்கும் வேட்டையைத் தொடர்ந்து, வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்படும் வன விலங்குகளின் இறைச்சியில் மரபணு பரிசோதனை செய்ய தெலங்கானா மாநிலம்
தமிழகத்தில் வன விலங்கு மரபணு சோதனை மையம் அமையுமா?


ஆம்பூர்: தமிழக வனங்களில் சட்ட விரோதமாக நடக்கும் வேட்டையைத் தொடர்ந்து, வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்படும் வன விலங்குகளின் இறைச்சியில் மரபணு பரிசோதனை செய்ய தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தமிழக வனத்துறையினர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். 
தமிழகத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காடுகள் அடர்ந்த மலைகளும், காப்புக்காடுகளும் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இந்த காப்புக்காடுகளில் சிறுத்தை, யானை, கரடி, கழுதைப் புலி, காட்டெருமை, கடமான், புள்ளிமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, முயல், காட்டு ஆடு, எறும்புத்தின்னி, பறவையினங்கள், குரங்குகள் என பல்வேறு விலங்கினங்கள் உள்ளன.
காப்புக்காடுகளிலும் பிற வனப்பகுதிகளிலும் சட்ட விரோதமாகப் புகுந்து நாட்டுத் துப்பாக்கிகளை கொண்டு வேட்டையாடுவது, வேட்டை நாய்களை பயன்படுத்தி வேட்டையாடுவது, மாமிசம் பூசப்பட்ட வெடிகுண்டுகளை வைத்து வேட்டையாடுவது, இரும்புக் கம்பியால் செய்த வலை அமைத்து வேட்டையாடுவது என பல வழிகளில் இறைச்சிக்காக வனவிலங்குகளை சமூக விரோதிகள் வேட்டையாடுகின்றனர்.
அண்மைக் காலமாக வனவிலங்கு ஆர்வலர்கள், சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்களின் தொடர் முயற்சியால் வனவிலங்குகளை வேட்டையாடுவோருக்கு எதிராக, விலங்குகள் காப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகள் அறிமுகமாகி, குற்றவாளிகள் கடும் தண்டனைக்கு உள்ளாகின்றனர்.
காட்டுக்குள் சென்று வேட்டையாடுவோர் மற்றும் வயல்வெளி பகுதிகளுக்கு வரும் மிருகங்களை வேட்டையாடுவோரை சம்பந்தப்பட்ட வனச்சரக அதிகாரிகள் பிடித்து, வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். வனவிலங்குகளை வேட்டையாடியவரிடம் வேட்டையில் ஈடுப்பட்டதற்கான ஆயுதமும், வேட்டையாடப்பட்ட விலங்கின் முழு உடலும் கிடைத்தால் வனத்துறையினருக்கு பணி எளிதாக முடிந்து விடுகிறது. ஆனால் இறைச்சி மட்டும் பிடிப்பட்டால், அந்த விலங்கினத்தை உறுதிப்படுத்தி, உரிய சான்றை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். இதற்காக வேட்டை நடைபெற்ற பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரிடம் சான்றிதழைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடைமுறை முன்பிருந்தது.
புதிய நடைமுறைப்படி, பறிமுதல் செய்யப்படும் இறைச்சியைக் கொண்டு கொல்லப்பட்ட வன விலங்கினத்தை உறுதிபடுத்தும் சான்றிதழை உள்ளூர் கால்நடை மருத்துவரிடம் பெற முடியாது. பறிமுதலான இறைச்சியை மரபணு சோதனைக்கு உள்படுத்த வேண்டி, தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாதில் உள்ள மத்திய அரசின் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்துக்கு (இங்ய்ற்ழ்ங் ஊர்ழ் இங்ப்ப்ன்ப்ஹழ் & ஙர்ப்ங்ஸ்ரீன்ப்ஹழ் ஆண்ர்ப்ர்ஞ்ஹ்) வனத்துறையினர் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் விலங்குகளின் மரபணுவை பரிசோதனை செய்யக் கூடிய சோதனைக் கூடம் இல்லையென்பதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாதில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் சம்பந்தப்பட்ட இறைச்சி குறித்து மரபணு சோதனை செய்ய நீதிமன்ற உத்தரவுக் கடிதம், மரபணு சோதனை கட்டணம் ஐந்தாயிரம் ரூபாய்க்கான வங்கி வரைவோலை ஆகியவற்றை வனத்துறையினர் நேரடியாக எடுத்துச் சென்று சமர்ப்பிக்க வேண்டும். இறைச்சியை மரபணு பரிசோதனை செய்து, சோதனை அறிக்கையை நீதிமன்றத்திற்கு அந்த ஆய்வு மையமே நேரிடையாக அனுப்பி வைக்கும்.
கொடூரமான ஆயுதங்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகளை கொண்டு வேட்டையாடுவோரை வனத்துறையினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பிடிப்பது ஒரு புறம்; பிடிபட்ட குற்றவாளி மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளியின் மருத்துவச் சான்று பெற்று சிறைச்சாலையில் ஒப்படைப்பது மற்றொரு புறம்; இதனிடையே வனவிலங்கு இறைச்சியின் மாதிரியை எடுத்துக் கொண்டு மரபணு பரிசோதனை அறிக்கை பெற ஹைதராபாத் செல்ல வேண்டிய நிலை. வன விலங்கு இறைச்சியின் பரிசோதனைக்காக ஹைதராபாத் சென்று வருவதற்கு வனத்துறை பணியாளருக்கு அரசு வழங்கும் பயணப்படித் தொகை கட்டுப்படியாவதில்லையெனவும் வனத்துறையினர் வருத்தத்துடன் கூறுகின்றனர். இந்தப் பயணத்தால் பெரும் கால விரயம் வேறு; ஏற்கெனவே வனத்துறையில் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
கிழக்கு தொடர்ச்சி மலைகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளும் இணையும் தமிழகத்தில் மிகப் பரந்த வனப்பகுதி உள்ளது. எனவே பல்வேறு தேவைகளைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திலேயே வன விலங்குகள் மரபணு பரிசோதனை செய்யும் ஆய்வு மையத்தை ஏற்படுத்த நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என்பதே வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com