கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிய ஆசிரியர்களுக்குப் பயிற்சி

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிய, ஆசிரியர்களுக்கான 5 நாள் பயிற்சி முகாம் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கியது


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கற்றலில் 
குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிய, ஆசிரியர்களுக்கான 5 நாள் பயிற்சி முகாம் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கியது. இதைத்தொடர்ந்து 32 மாவட்டங்களிலும் இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக அரசின் சார்பில் உதவி மையங்கள் (Resource Centres)  அமைக்கப்படவுள்ளன.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி), கற்றலில் குறைபாடுடைய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சென்னை டிஸ்லெக்ஸியா' அமைப்பு ஆகியவை சார்பில் முதல்கட்டமாக, சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி எழும்பூரில் உள்ள அரசு மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கியது. 
இந்தப் பயிற்சியை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தொடங்கி வைத்தார். 
15 சதவீத மாணவர்களுக்கு: இதுகுறித்து எஸ்சிஇஆர்டி இயக்குநர் க.அறிவொளி, சென்னை டிஸ்லெக்ஸியா' அமைப்பின் நிறுவனர் டி.சந்திரசேகர் ஆகியோர் கூறியது: 
கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கு மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது போன்று கற்றுக் கொடுக்க முடியாது. மல்ட்டி சென்சரி' (Multi sensory)  அணுகுமுறையில் அவர்களுக்கு பாடங்களை கற்றுத்தர வேண்டும்.
அதாவது, கண்ணால் பார்த்து, காதால் கேட்டு, கையால் தொட்டு உணர வைத்துக் கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த முறையில் கற்றுக் கொடுத்தால், அவர்கள் பாடங்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்வர்.
தமிழகத்தில் 12 சதவீதம் முதல் 15 சதவீத குழந்தைகளுக்கு கற்றலில் குறைபாடு இருப்பதாக தெரிய வந்துள்ளது. 
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் பயிற்சி முகாம் அடுத்து வரும் நாள்களில் நடைபெறும். 
என்னென்ன பயிற்சிகள்?: முகாமில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு கற்றலில் குறைபாடு என்றால் என்ன, அதை எப்படிக் கண்டறிவது, மொழித் திறன், இசை, வடிவமைப்பு உள்பட 8 வகையான அறிவுத் திறன்களை குழந்தைகளிடம் அடையாளம் காணுவது, எழுதுதல், படித்தல், எழுத்துப் பிழை, கணக்கிடுதல் ஆகியவற்றில் உள்ள பிரச்னைகளை கண்டறிதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். 
இந்தப் பயிற்சியைப் பெறும் ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சியை வழங்குவர். 
இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அரசின் சார்பில் உதவி மையங்கள் (Resource Centres) அமைக்கப்படும். இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களில் கற்றலில் குறைபாடு கண்டறியப்படும் குழந்தைகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்றனர் அவர்கள்.
இதில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com