நாளை ஆசிரியர் தினவிழா: 363 ஆசிரியர்கள்- 960 மாணவர்களுக்கு விருதுகள் வழங்குகிறார் முதல்வர்

தமிழக அரசின் சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னையில் முப்பெரும் விழாவாக புதன்கிழமை நடைபெறவுள்ளது.


தமிழக அரசின் சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னையில் முப்பெரும் விழாவாக புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதில் 363 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும், முதல் முறையாக மாணவர்களுக்கு காமராஜர் விருதும் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கவுள்ளார். 
தமிழகத்தில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினவிழா நடத்தப்பட்டு வருகிறது. 
விழாவில் மாணவர் சேர்க்கை, புதுமைக் கற்பித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும்.
முப்பெரும் விழா: இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தினவிழா டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது, தூய்மைப் பள்ளி விருது வழங்கல் என முப்பெரும் விழாவாக நடைபெறவுள்ளது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு விருதுகளை வழங்கவுள்ளார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றுகிறார்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்த ஆண்டு 363 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விருதுடன் ரூ.10 ஆயிரம் ரொக்கம், 36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். 
இந்த ஆண்டு முதல் முறையாக மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு...:அதே போன்று கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 960 மாணவர்களுக்கு (மாவட்டத்துக்கு 30 பேர் வீதம்) முதல் முறையாக காமராஜர் விருது வழங்கப்படுகிறது. மேலும் 40 அரசுப் பள்ளிகளுக்கு தூய்மைப்பள்ளி விருதும் வழங்கப்படவுள்ளது. 
இந்த விழாவில் அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்பட கல்வித் துறை சார்ந்த அதிகாரிகள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com