அரசுப் பள்ளிகளில் பிறமொழிப் பாடப்புத்தகங்கள் அனைத்தும் செப்.15-க்குள் வழங்கப்படும்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

அரசுப் பள்ளிகளில் பிறமொழிப் பாடப் புத்தகங்கள் அனைத்தும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.


அரசுப் பள்ளிகளில் பிறமொழிப் பாடப் புத்தகங்கள் அனைத்தும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தமிழ் தவிர பிற மொழிப் பாடங்களான மலையாளம், சமஸ்கிருதம், ஜெர்மன், கன்னடம், தெலுங்கு, பிரெஞ்சு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைத் தேர்வு செய்து படிக்கலாம். கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கிய நிலையில், இதுவரை பிற மொழிப் பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு அதற்குரிய பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செப்டம்பர் 3 ஆம் தேதி செய்தி வெளியாகியிருந்தது. 
அதில், தமிழகத்தில் 22 ஆயிரம் பிளஸ் 1 மாணவர்கள் பிரெஞ்சு பாடத்தைத் தேர்வு செய்துள்ளனர். இதுதவிர ஹிந்தி, சமஸ்கிருதம், ஜெர்மன், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் பாடங்களையும் மாணவர்கள் தேர்வு செய்து படித்து வருகின்றனர். இதில் கன்னியாகுமரியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் மலையாளத்தையும், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் படிக்கும் மாணவர்கள் கன்னடத்தையும், சென்னை, கோவையில் படிக்கும் மாணவர்கள் ஜெர்மன் மொழியையும் தேர்வு செய்து படிக்கின்றனர். 
ஆனால், இவர்களுக்கு இதுவரைப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் தேர்வு நெருங்கி வரும் நேரத்தில் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாகவே முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, ஹிந்தி, சமஸ்கிருதம், ஜெர்மன் ஆகிய மொழி பாடப் புத்தகங்கள் தான் வழங்கப்படாமல் உள்ளன. ஆனால், இதற்கு மாற்றாக அனைத்து மாணவர்களும் பயனடையும் வகையில் அனைத்து மொழிப் பாடப் புத்தகங்களும் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அனைத்து மொழிப் பாடப் புத்தகங்களும் முறையாக புத்தக வடிவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com