விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு

திருவாரூர் அருகே விளைநிலங்கள் வழியாக கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள குழாய் பணிகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் அருகே விளைநிலங்கள் வழியாக கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள குழாய் பணிகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 கடந்த 2012-ஆம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் இயற்கை எரிவாயு கழகம் எடுக்கும் கச்சா எண்ணெயை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் திருச்சி வரை கொண்டு செல்ல முடிவு செய்து விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணியைத் தொடங்கியது. இப்பணிகளுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவியதையடுத்து, ஐஓசி நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளை அப்போதைக்கு நிறுத்திக் கொண்டது.
 இந்நிலையில், திருவாரூர் அருகே சொரக்குடி, மூங்கில்குடி, மூலங்குடி, காக்கா கோட்டூர், ஓமக்குளம் உள்ளிட்ட 10 கிராமங்களில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குழாய் பதிக்கும் பணிகளை ஐஓசி தொடங்கியுள்ளது. இப்பணிகளுக்காக வியாழக்கிழமை நள்ளிரவு, போலீஸாரின் துணையுடன் விவசாயி ஒருவரது சம்பா சாகுபடி செய்யப்பட்ட விளைநிலத்தில் குழாய்கள் இறக்கப்பட்டுள்ளன. இதையறிந்த நிலத்தின் உரிமையாளர் மற்றும் கிராம மக்கள் குழாய்கள் இறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியது: தங்களது விளைநிலங்களில் குழாய் பதிக்க அனுமதி வழங்கவில்லை. அத்துமீறி குழாய்களை, சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் இறக்கிவைத்துள்ளனர். அந்த குழாய்களை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும், மக்களின் எதிர்ப்பை மீறி குழாய் பதிக்க முற்பட்டால் கடுமையான போராட்டங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட நேரிடும் என்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com