ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நீர் ஆய்வு: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய நிலத்தடி நீர்வள வாரியத்தின் அறிக்கை இருப்பதாகக் கூறி தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நீர் ஆய்வு: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய நிலத்தடி நீர்வள வாரியத்தின் அறிக்கை இருப்பதாகக் கூறி தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 இந்த அறிக்கையை தமிழகம் நிராகரிப்பதாகவும், மத்திய அரசு, ஆய்வு அறிக்கையை முழுமையாக உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வலியுறுத்தியுள்ளார்.
 இது தொடர்பாக, மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையின் (நிலத்தடி நீர்) செயலருக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-
 தகவல் தெரிவிக்காமல்...:தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபடுதல் தொடர்பாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் தன்னிச்சையாக மேற்கொண்ட ஆய்வு அறிக்கையுடன் அதனுடன் இணைந்து அலுவலகக் குறிப்பாணையும் தமிழக அரசுக்கு கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதிதான் கிடைக்கப் பெற்றது. தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்வது தொடர்பாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தை மத்திய நீர்வள ஆதாரத் துறையானது தேர்வு செய்துள்ளதுடன், அது குறித்து தமிழக அரசுக்கோ, சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கோ எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. இது தமிழக அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிவு எடுத்தது ஏன்?: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரிவான ஆய்வுகளையும், ஆய்வு தரவுகளையும், இதர காரணிகளையும் முன்வைத்தே அந்த ஆலையை இயக்குவதற்கான அனுமதியை புதுப்பிக்க மறுப்பு தெரிவித்தது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.
 அறிவியல் பூர்வமான ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார பாதிப்பு மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்கு போதிய பாதுகாப்பும் இல்லை என்ற முடிவுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வந்தது. இதையடுத்தே ஆலை மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் 48-ஏ-இன் படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசின் அடிப்படைக் கடமையாகும். இந்த அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
 இப்போது ஆய்வு ஏன்?:
 ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ள பகுதியில் நீரின் தரம் மற்றும் தன்மை குறித்து ஆய்வு செய்திட மத்திய நிலத்தடி நீர் வள வாரியத்தை, மத்திய நீர்வள ஆதாரத் துறை அமைச்சகம் கோரியிருக்கிறது. ஸ்டெர்லைட் தொடர்பாக, தமிழக அரசின் அதிகாரம் பெற்ற அமைப்பான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட நிலையிலும், இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள சூழலிலும், ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்வது இந்தத் தருணத்தில் பொருத்தமற்ற, நம்பகத்தன்மை இல்லாததாகும்.
 ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான கருத்து: மத்திய நிலத்தடி நீர் வள வாரியமானது தனது அறிக்கையின் முடிவாகத் தெரிவித்துள்ளது குறித்துக் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது, ""தமிழக அரசின் உத்தரவுகள் காரணமாக, ஸ்டெர்லைட் ஆலையானது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இதனால், ஆலைக்கு உள்ளேயும், வெளியேயும் நிலத்தடி நீர் தொடர்பான மாதிரிகள் ஆய்வுக் குழுவினரால் சேகரிக்க முடியவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆய்வுக் குழுவினரால் நுழையவும் முடியவில்லை. எனவே, தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமாக அமையாது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மத்திய நிலத்தடி நீர் வள வாரிய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தானது, ஸ்டைர்லைட் தாமிர உருக்காலைக்கு ஆதரவாக இருப்பதாகவே தோன்றுகிறது. மத்திய நிலத்தடி நீர்வள வாரியத்தின் அறிக்கையானது முற்றிலும் அரைகுறையாகவும், ஆதாரமற்றதாகவும் அமைந்துள்ளது.
 மேலும், அனுபவப்பூர்வமான தரவுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அமைந்திடவில்லை. அறிவியல்பூர்வ அடிப்படை ஆதாரங்களைக் கொண்ட விவரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. மேலும், இரண்டு அறிவியல் நிபுணர்கள் எப்படி இப்படியொரு அரைகுறையான, ஆதாரமற்ற அறிக்கையை ஏன் அளித்தார்கள் என்பது தெரியவில்லை.
 உள்நோக்கத்துடன்...: மத்திய நிலத்தடி நீர்வள ஆதார வாரியத்தின் அறிக்கையானது உள்நோக்கத்துடனும், பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழக்குகளுக்கு குந்தகம் ஏற்படுத்துவதாகவும் அமைந்திருப்பதாக தமிழக அரசு கருதுகிறது.
 சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்: கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் இந்த அறிக்கையால் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விடும் வாய்ப்புகள் உள்ளன.
 சுற்றுச்சூழலுக்கு தமிழக அரசின் அதிகாரம் பெற்ற அமைப்பான தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமானது ஏற்கெனவே பல ஆய்வுகளை எடுத்துள்ளது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் தமிழக அரசு முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வருகிறது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன.
 இந்தச் சூழ்நிலையில், மத்திய நிலத்தடி நீர்வள வாரியத்தின் அறிக்கையை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்கிறது. இது தொடர்பாக முழுமையான அறிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com