ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு 

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை விதிக்க கோரிய தமிழக அரசின் மனுவுக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு 

புது தில்லி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை விதிக்க கோரிய தமிழக அரசின் மனுவுக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.  இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கடந்த மே 28 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி மறுத்துவிட்டது.

மேலும், வழக்கு தொடர்பாக முகாந்திரம், தகுதிப்பாட்டை பரிசீலிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டது.  இதற்கிடையே, ஸ்டெர்லைட் விவகாரத்தை விசாரிக்கும் குழுவின் தலைவராக மேகாலயா மாநில உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வாலை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆலையில் குழு ஒன்று ஆய்வு செய்ய வேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது. முதலில் என்ன  அடிப்படையில் இந்த உத்தரவுக்கு தடை கோருகிறீர்கள் என்று தெரியவில்லை.

முதலில் அந்த குழுவானது ஆலையில் ஆய்வு செய்யட்டும். ஆய்வின் முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யலாம்,

இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com