பரங்கிமலை ரயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு: ரயில்வே தீர்ப்பாயம் வழங்கியது

சென்னை பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீட்டை ரயில்வே தீர்ப்பாய தலைவர் கண்ணன்


சென்னை பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீட்டை ரயில்வே தீர்ப்பாய தலைவர் கண்ணன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
கடந்த ஜூலை மாதம் 24 -ஆம் தேதி, சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூருக்கு இயக்கப்பட்ட மின்சார ரயிலில், படியில் தொங்கியபடி பயணம் செய்த, 5 பயணிகள் பரங்கிமலை ரயில் நிலைய நடைமேடை சுவர் மோதி இறந்தனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள ரயில்வே இழப்பீட்டு தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. விபத்தில் இறந்த ஐந்து பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 8 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ. 2 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதையொட்டி இழப்பீடு வழங்க, தெற்கு ரயில்வேயால் உரிய தொகை தீர்ப்பாயத்தில் டெபாசிட் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உரிய முறையில் விண்ணப்பம் செய்து இழப்பீடு பெறலாம் எனவும் தீர்ப்பாயம் தெரிவித்தது.
அதன்படி, வரைமுறைகளுக்கு உட்பட்டு இழப்பீடு வழங்க தீர்ப்பாயத்தில் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க தீர்ப்பாய நீதிபதி கண்ணன் தில்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை சென்னை வந்தார்.
அவர், பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்த நவீன்குமார், சிவகுமார், பாரத், வேல்முருகன், ஸ்ரீவர்சன் ஆகியோரின் குடும்பத்தினர் தலா ரூ. 8 லட்சம் இழப்பீடாக வங்கியில் இருந்து பெறுவதற்குரிய ஆணையை வழங்கினார்.
இதேபோல் பலத்த காயமடைந்த விஜயகுமாருக்கு ரூ.3.2 லட்சம் , விக்னேஷுக்கு ரூ. 2 லட்சம், முகமது யாசர், நரேஷ் குமார் ஆகியோருக்கு தலா ரூ. 1.24 லட்சம் இழப்பீடாக வங்கியில் இருந்து பெறுவதற்கான ஆணையையும் கண்ணன் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com